கலாஷேத்ரா பாலியல் தொல்லை சம்பவம்! முக்கிய முடிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க, விசாரணை குழுவை நியமிப்பது சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக விளக்கமளிக்க கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Apr 17, 2023, 02:04 PM IST
  • மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.
  • தங்கள் அடையாளத்தை வெளியிடாமல் வழக்கை நடத்த வேண்டும்.
  • பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
கலாஷேத்ரா பாலியல் தொல்லை சம்பவம்! முக்கிய முடிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம்! title=

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஹரிபத்மன் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பின்னணியில், குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரி கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  தங்கள் அடையாளத்தை வெளியிடாமல் இந்த வழக்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ள மாணவிகள், தங்கள் விவரங்களை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கல்லூரியில் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர கலாஷேத்ரா அறக்கட்டளை தவறிவிட்டதாகவும், பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகவும் மனுவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாலியல் தொல்லை தடுப்புக் கொள்கையை வகுக்கும் சட்டப்பூர்வ கடமையில் இருந்தும் கலாஷேத்ரா தவறி விட்டதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை குற்றச்சாட்டு குறித்து மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், தானாக முன்வந்து விசாரணை நடத்த குழுவை அமைத்தது சட்டவிரோதமானது எனவும், மாணவிகளின் புகார் மீது விசாரணை நடத்த அக்கறை காட்டாதது பாரபட்சமானது எனவும் கூறப்பட்டுள்ளது.  புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என கலாஷேத்ராவுக்கு தடை விதிக்கவேண்டும்;  பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள உள் விசாரணைக் குழுவில், மாணவிகள் மற்றும் பெற்றோரின் பிரதிநிதிகளை சேர்த்து மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரயில் டிக்கெட் வாங்கவே தகுதியில்ல... கருணாநிதி குடும்பத்திற்கு இத்தன கோடி எப்படி வந்துச்சு - ஹெச். ராஜா

பாலியல் தொல்லை அளித்தவர்கள் வளாகத்திற்குள் நுழையவும், மாணவிகளிடம் கலந்துரையாடவும் தடை விதிக்கவேண்டும்;  கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய தமிழ்நாடு மகளிர் ஆணையம், தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்; பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்பு சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் அடிப்படையில் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லைகளை தடுப்பது குறித்த கொள்கையை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.  இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை, வெறும் கண்துடைப்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை குழு மாற்றியமைக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

கலாஷேத்ரா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், புகாரளித்த மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என உத்தரவாதம் அளித்தார்.  மேலும், பாலியல் தொல்லை அளித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இவர்கள் நிர்வாகத்தில் தலையிடவோ, வளாகத்தில் நுழையவோ அனுமதியில்லை எனவும் உறுதி அளித்தார்.  தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மாநில மகளிர் ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், குற்ற வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, கலாஷேத்ரா நடவடிக்கையில் மாணவிகள் திருப்தியடையவில்லை எனவும், நிறுவனத்தின் பெயரை காப்பாற்ற விசாரணைக் குழுவை உயர் நீதிமன்றம் ஏன் நியமிக்கக் கூடாது என விளக்கமளிக்கும்படி கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு உத்தரவிட்டார்.  மேலும்,  மாணவிகளின் அடையாளத்தை வெளிப்படுத்த கூடாது எனவும், பாதிக்கப்பட்ட மாணவிகள், சாட்சிகளாக உள்ள மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது என தடை விதித்தும் உத்தரவிட்டார்.  அதேபோல, பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள், மாணவிகளுடன் தொடர்பு கொள்ள கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.  மாநில மகளிர் ஆணைய அறிக்கையை  சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி கலாஷேத்ரா அறக்கட்டளை, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் படிக்க | 12 வயது சிறுமிக்கு ஆபாச படம்.. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News