ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்லு-வின் ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திரா மாநிலத்தில் நடைப்பெற்ற சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப் பேற்றார். கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார். இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை சினிமா படமாக எடுக்க தெலுங்கு திரையுலகம் முடிவு செய்தது. இதனையடுத்து இப்படத்தை பிரபல டைரக்டர் ராம்கோபால்வர்மா இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்திற்கு ‘கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்லு’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் ஜெகன்மோகன் ரெட்டி, வேடத்தில் நடிகர் அஜ்மல் நடித்து வருகிறார். இவர் தமிழில் அஞ்சாதே, கோ போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.
இப்படம் குறித்து அஜ்மல் கூறுகையில், இத்திரைப்படம் அரசியல் திரில்லர் மற்றும் மாநிலத்துக்கு தொடர்புடையதாக இருக்கும். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கியது. நான், ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்தது இல்லை. ஆனால் அவரது வீடியோக்களை பார்த்து அவரை போல் என்னை மாற்றி கொண்டு நடித்துள்ளேன்.
தற்போதுவரை அவரது வேடத்தில் நடித்ததற்கு நல்ல கருத்துக்கள் வந்துள்ளன. ஜெகன்மோகன் ரெட்டி வேடத்துக்கு பலரது பெயர்கள் பரிசீலிக்கப் பட்டன, இறுதியில் அவரது உயரம் மற்றும் உருவ ஒற்றுமைக்கு நான் சரியாக இருப்பேன் என்று கருதினர். இதன் காரணமாகவே எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னதாக தான் கோ படத்தில் முதல் அமைச்சராக நடித்து இருப்பதால், இத்திரைப்படத்தில் முதல்வர் வேடத்தில் நடிப்பது புதிதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைபடத்தின் ட்ரைலர் கீழே உங்கள் பார்வைக்கு...