அரசியலில் லதா ரஜினிகாந்த்: கண் துடைப்பா அல்லது மாஸ்டர் ஸ்ட்ரோக்கா?

ரஜினி அளித்த ஏமாற்றத்தால், கோவம், ஏமாற்றம், அவமானம், வருத்தம் என ஏகப்பட்ட உணர்ச்சிகளின் மிகுதியால் அவதிப்படும் ரசிகர்களை குளிரூட்டும் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ இதுவா என்ற கேள்வியும் எழுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 29, 2021, 05:08 PM IST
  • லதா ரஜினிகாந்த் அரசியலில் நுழையப்போவதாக வரும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
  • ஜனவரி 28 அன்று ஒரு புதிய அரசியல் கட்சியை துவக்கப்போவதாக அர்ஜுனமூர்த்தி அறிவித்தார்.
  • சில நாட்களில் அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பு.
அரசியலில் லதா ரஜினிகாந்த்: கண் துடைப்பா அல்லது மாஸ்டர் ஸ்ட்ரோக்கா? title=

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே அசத்தலான நடிப்பு, அன்பான பேச்சு, அசால்டான ஸ்டைல், அதிரடியான வசனங்கள், அலாதி பிரியம் கொண்ட ரசிகர்கள் என இவையெல்லாம் தான் நம் கண்முன் வரும். இன்றும் இதில் எதுவுமே கொஞ்சமும் குறையவில்லை. அவர் படத்திலேயே வரும் வசனத்தைப் போல வயது ஆக ஆக அவருடைய ஸ்டைலும், அழகும், ஈர்ப்பும், மக்களுக்கு அவர் மீதிருக்கும் பாசமும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.

ஆனால், சமீப காலங்களில், இந்த வரிசையில், குழப்பம், கலக்கம் ஆகியவையும் சூப்பர் ஸ்டாருடன் செர்ந்து விட்டன. துரதிஷ்டவசமாக கடந்த சில மாதங்களில், அவர் சொன்ன பல விஷயங்களுக்கு நேர் மாறாக அவர் நடந்து கொள்ள வேண்டிய சூழ்நிலைகளில் அவர் சிக்கிக்கொண்டு தவிப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

சூப்பர் ஸ்டார் (Super Star) ரசிகர்களுக்கு அவரது அரசியல் பிரவேசம் என்பது எட்டாத கனியாகிவிட்டது. ‘மக்களுக்காக உயிரையும் கொடுக்க தயார்’ என கூறிய ரஜினி, ‘என்னை வற்புறுத்தாதீர்கள்’ என்று கூறிய பிறகு, அரசியலைப் பொறுத்த வரை இனி அவரிடம் எதிர்பார்க்க ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.

அவரது இந்த முடிவால், அவரது அபிமானிகள், ரசிகர்கள், அரசியலில் மாற்றம் காண நினைத்தபர்கள் என பலரும் மனமுடைந்துள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவருக்கு மட்டும் இதில் மகிழ்ச்சியா என கேட்டால், ‘இல்லை’ என்பதுதான் சரியான பதிலாக இருக்கும். முன் இருந்திராத ஒரு வித ஆக்ரோஷத்தையும், துடிப்பையும், கோவத்தையும் அனைவரும் அவரது சமீபத்திய உரைகளில் கண்டோம். அவரது அரசியல் பிரவேசம் குறித்த சந்தேகங்களும் அவராற்றிய அதிரடி உரைகளால் தவிடுபொடியானது.

ஆனால், திடீரென அவரது உடல்நிலை அனைத்துக்கும் ஒரு பெரிய தடையாய் வந்து சேர்ந்தது. உடல்நிலை சரியில்லை என்பது முன்பே தெரிந்த விஷயம்தான் என்றாலும், இவ்வளவு பெரிய முடிவை எடுக்கும் அளவிற்கு அவருக்கு இப்போது வந்த சங்கடம் என்ன என்பது வெளி உலகுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

இப்படிப்பட்ட ஒரு நிலையில், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் அரசியலில் நுழையப்போவதாக வரும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் இதற்கான சிறப்பு வழிபாடு நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. ரஜினிகாந்த பூரணமாக குணமடையவும், லதா ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சி வெற்றி அடைய வேண்டும் அவர் சிறப்பு பூஜைகளை செய்தார் என கூறப்படுகின்றது.

ALSO READ: பரட்டையின் பாச்சா பலிக்குமா அல்லது சப்பாணியின் சாணக்கியத்தனம் ஜெயிக்குமா!!

லதா ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப்போவது உறுதி என்றும், இன்னும் சில நாட்களில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ரஜினிகாந்த் (Rajinikanth) அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்த நேரத்தில், பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி, பா.ஜ.க-விலிருநு விலகி, ரஜியுடன் சேர்ந்தார். ரஜினி துவக்கப்போகும் புதிய கட்சியில், கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அர்ஜுனமூர்த்திக்கு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் ரஜினி அரசியலுக்கு முழுக்கு போடவே, விரக்தியடைந்த அர்ஜுனமூர்த்தி சில நாட்கள் மௌனமாக இருந்தார். சிறிய இடைவெளிக்குப் பிறகு, ஜனவரி 28 அன்று ஒரு புதிய அரசியல் கட்சியை துவக்கப்போவதாக அவர் அறிவித்தார். அது மட்டுமல்லாமல், “எனது கட்சியின் கோட்பாடுகள், கொள்கைகள் நிச்சயம் பா.ஜ.க-விலிருந்து மாறுபட்டதாக இருக்கும். ரஜினி ரசிகர்கள் எனது கட்சியில் இணைந்துகொள்ளலாம்” என்றும் அதிரடியாக, பகிரங்கமாக ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார் அர்ஜுனமூர்த்தி.

இவரது கட்சிக்கு பின்புலமாக லதா ரஜினிகாந்த் இருக்கிறார் என்றும், கடந்த சில நாட்களாக இந்த கட்சிக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ: சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் release date வெளியிடப்பட்டது

அர்ஜினமூர்த்தி, போயஸ் கார்டனில் (Poes Garden) லதா ரஜினிகாந்தை மூன்று முறை சந்தித்துப் பேசியிருக்கிறார். தமிழகத்தில் ரஜினிக்கு 10 சதவிகித வாக்குகள் இருக்கின்றன. இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் அவருக்கு வாக்களிக்க காத்திருகிறார்கள். என்னதான், தன் ரசிகர்கள் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என ரஜினி அறிவித்தாலும், தனக்கென இருக்கும் அபிமானிகளின் அபிமானமும், அவர்களது வாக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்குப் போவதை ரஜினியும் விரும்ப மாட்டார். அவரது லட்சக்கணக்கான ரசிகர்களும் அதற்குத் தயாராக இல்லை.

இந்த நிலையில், ரஜினிகாந்தின் மனைவியும், ரஜினியால் தனது கட்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தியும் சேர்ந்து கட்சி துவக்கினால், அதற்கு மறைமுகமாக ரஜினியின் ஆதரவு இருக்கிறது என்றுதான் பொருள்.

ஆனால், ‘ரஜினி’ என்ற செல்லுக்கு உள்ள சக்தி, அவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் இருக்குமா? ‘சூப்பர் ஸ்டார்’ மீது அவர் ரசிகர்களுக்கு உள்ள பாசம் அவருக்கு நெருங்கியவர்கள் தொடங்கும் கட்சிக்கு வாக்குகளாக மாறுமா? சாத்தியம் என்றாலும், எந்த அளவிற்கு சாத்தியம் என்ற கேள்வியும் எழுகிறது.

இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, ரஜினி அளித்த ஏமாற்றத்தால், கோவம், ஏமாற்றம், அவமானம், வருத்தம் என ஏகப்பட்ட உணர்ச்சிகளின் மிகுதியால் அவதிப்படும் ரசிகர்களை குளிரூட்டும் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ இதுவா என்ற கேள்வியும் எழுகிறது. இன்னும் சில மாதங்களில் ரஜினியின் ‘அண்ணாத்த’ (Annaatthe) படம் வெளிவரவுள்ளது. இந்த நேரத்தில் ரசிகர்களின் கோவத்தை சம்பாதிப்பது புத்திசாலித்தனமா? படத்தை ஓட்டும் தந்திரமா இது? கட்சி ஆரம்பிக்கும்போது உடன் இருந்துவிட்டு, பின்னர் மெதுவாக லதா ரஜினிகாந்த் பின்வாங்கி விடுவாரா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. காலம் பதில் சொல்லுமா? காலா பதில் சொல்லுவாரா? காத்திருபோம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News