அரசாங்கப் பொறுப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தும் முதல்வர் -ஸ்டாலின் புகார்

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 23, 2018, 05:07 PM IST
அரசாங்கப் பொறுப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தும் முதல்வர் -ஸ்டாலின் புகார் title=

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள புகார் மனுவில் கூறியதாவது:-

இன்று (23-07-2018) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘தமிழக ஆளுநர்’ அவர்களை நேரில் சந்தித்து, சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பினாமி மற்றும் உறவினர் வீடுகளில் நடைபெற்ற ரெய்டுகள் குறித்து உடனடி விசாரணை நடத்திட வேண்டுமென புகார் மனுவை அளித்தார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின். 

அதன் முழு விவரம் பின்வருமாறு:-

பொது ஊழியர்- ஊழல் தடுப்புச் சட்டம் 1988 வருமான வரிச் சோதனை, முதலமைச்சரின் உறவினர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் வழங்கியது, 3120 கோடி ரூபாய் ஊழல், எடப்பாடி திரு பழனிச்சாமி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும், அமைச்சர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை கோருதல் என புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக இருக்கும் நாகராஜன் செய்யாத்துரையின் சொந்த நிறுவனங்கள் அல்லது தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜூலை 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பதை மாண்புமிகு ஆளுநர் அவர்களின் கவனத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொண்டு வர விரும்புகிறேன்.

இந்த சோதனையின் போது மிகப்பெரிய அளவில், "180" கோடி ரூபாய் பணமும், "105" கிலோவிற்கும் மேற்பட்ட தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் சோதனைகளும், விசாரணைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள செய்தியின்படி வருமான வரித்துறையின் சோதனைக்குட்பட்ட நிறுவனங்கள் 

1) எஸ்.பி.கே ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட்,
2) எஸ்.பி.கே ஹோட்டல்ஸ், 
3) எஸ்.பி.கே அன்ட் கோ எக்ஸ்பிரஸ்வே பிரைவேட் லிமிடெட் மற்றும்
4) ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை ஆகும். 

எஸ்.பி.கே க்ரூப் ஆப் கம்பெனிகளின் மேலாண்மை இயக்குனரான திரு நாகராஜன் மாண்புமிகு முதலமைச்சர் மகன் மிதுன் என்பவரின் மாமனார் திரு பி சுப்பிரமணியம் என்பவரின் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திலும் பங்குதாரர் ஆவார். அமைச்சரவை இலாகா ஒதுக்கீட்டின்படி மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொறுப்பில் “நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்” துறை இருக்கிறது. ஒப்பந்ததாரர் செய்யாத்துரை நாகராஜனுக்கும், அவர் பார்ட்னராக இருக்கும் நிறுவனங்களுக்கும் கீழ்கண்டவாறு ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

அவை, 

1) திருநெல்வேலி- செங்கோட்டை- கொல்லம் நான்கு வழிச்சாலையை” விரிவுபடுத்தி, பலப்படுத்தும் ரூபாய் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

2) பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட்” நிறுவனத்தில் திரு சேகர் (ரெட்டி- முன்பு வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளானவர்), திரு நாகராஜன், திரு பி. சுப்ரமணியம் (முதலமைச்சர் மகனின் மாமனார்) ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

3) வண்டலூர் முதல் வாலாஜா சாலை வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் “எஸ்.பி.கே அன்ட் கோ” நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

4) திருவள்ளூர், கிருஷ்ணகிரி , பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஐந்து வருடங்களான 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” விற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட 3120 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் மகனின் மாமனார் திரு பி. சுப்பிரமணியம் மற்றும் திரு நாகராஜன் செய்யாத்துரை மற்றும் திரு சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அன்ட் கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்.பி.கே அன்ட் கோ நிறுவனங்களுக்கே சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 16.5.2011 முதல் 16.5.2016 வரையிலும், அதன் பிறகு 23.5.2016 முதல் 13.2.2017 வரை “நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்” துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். அதன் பிறகு 14.2.2017 முதல் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையை தன் வசமே தக்க வைத்துக் கொண்டுள்ளார். உள்நோக்கத்துடன் இந்த துறை தன் வசமே ஏழு வருடங்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு எடப்பாடி திரு பழனிச்சாமி, தன்னிடம் உள்ள அரசாங்கப் பொறுப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி தனக்கும், தனது மகனின் மாமனார் பி. சுப்பிரமணியன் மற்றும் நாகராஜன் செய்யாத்துரை ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கும் சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளார்.

தனது உறவினர்களுக்கு சட்டவிரோதமாக ஒப்பந்தங்களை வழங்கியதோடு மட்டுமின்றி, அவர்கள் ஆதாயம் தேடுவதற்கும் துணை போயிருக்கிறார். இதன் மூலம் “அரசியல் சட்டத்தின் படி மட்டுமே செயல்படுவேன். யாருக்கும் சாதகமாக செயல்பட மாட்டேன்” என்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் முன்பு எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாண உறுதிமொழியை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி மீறி விட்டார்.

முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது மகனின் மாமனாரும், அவருடைய பங்குதாரரான நாகராஜன் செய்யாத்துரை ஆகியோரும் வைத்துள்ள மேற்கண்ட நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தத்தை சட்டவிரோதமாக வழங்கியதன் மூலம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.

திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது தன் உறவினர்களுடன் இணைந்து செய்த குற்றத்தின் மூலமும் (Criminal Misconduct), தனது உறவினர்களுடன் கூட்டுச் சதி செய்து (Collusion) நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை கொடுத்ததன் மூலம் சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளார். ஆகவே முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி திரு பழனிச்சாமி பொது ஊழியர் என்ற முறையில் 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-ன் கீழ் உள்ள அனைத்து உட்பிரிவுகளின்படியும் தண்டனைக்கு உள்ளாகும் குற்றம் புரிந்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு ஆர். எஸ் பாரதி அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி சட்டவிரோதமாக அளித்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஆணையர் மற்றும் ஊழல் தடுப்புத் துறை இயக்குனர் ஆகியோருக்கு ஏற்கனவே 13.6.2018 அன்று புகார் அளித்திருக்கிறார்.

ஆகவே மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி அவர்களின் 3120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ஊழல் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

இது தவிர, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் மத்திய நிதியுதவி மூலம் நடைபெறும் திட்டங்களிலும், பணிகளிலும் அமைச்சர்கள் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே அதிமுக அமைச்சர்களின் மெகா ஊழல் மீதும் சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு ஆளுநர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆளுநருக்கு அளித்த புகார் கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Trending News