ஸ்டெர்லைட் ஆலை மூடல் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு முக்கிய மைல்கல்- ராமதாஸ் அறிக்கை..

ஸ்டெர்லைட் ஆலை மூடல் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு முக்கிய மைல்கல். மக்களின் உயிரையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடன் அளிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2020, 04:05 PM IST
ஸ்டெர்லைட் ஆலை மூடல் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு முக்கிய மைல்கல்- ராமதாஸ் அறிக்கை.. title=

புதுடெல்லி: கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடியில் நச்சுவாயுக் கசிவாலும், புற்றுநோய் உள்ளிட்ட நோய்ககளாலும் ஏராளமான அப்பாவிகள் உயிரிழக்க காரணமாக இருந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மக்களின் உயிரையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடன் அளிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்பட்டதால், அந்த ஆலையை மூட வேண்டும் என்று 2018-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்திருந்தது. அதனடிப்படையில் ஆலையை நிரந்தரமாக மூடி அதே ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி  தமிழக அரசு ஆணையிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும்  தொடரப்பட்ட வழக்குகளின் தொடர்ச்சியாக, உச்சநீதிமன்ற ஆணைப்படி இந்த வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்திருக்கிறது. சுற்றுச்சூழலைக் கெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இந்த தீர்ப்பு மிக முக்கியமான மைல்கல் ஆகும். இது ஒட்டுமொத்த  தமிழகத்திற்கும் கிடைத்துள்ள வெற்றி ஆகும். இந்த வெற்றி வீழ்த்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்த ஆணை மிகவும் நியாயமானது. அந்த ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. காரணம்.... ஸ்டெர்லைட் ஆலை நிகழ்த்திய சுற்றுச்சூழல் சீரழிப்புகள் ஏராளமானவை.

ஸ்டெர்லைட் ஆலை 1996ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்தே விதிமீறல்கள் தொடர்ந்தன. ஆலை தொடங்கப்பட்டதற்கு பிந்தைய கடந்த 22 ஆண்டுகளில் ஏற்பட்ட அழிவுகள் கொஞ்சநஞ்சமல்ல. 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் கொல்லப்பட்டாலும் இருவர் மட்டுமே உயிரிழந்ததாக கணக்குக்காட்டப்பட்டது. 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. தொடங்கப்பட்ட நாள் முதல் 2013-ஆம் ஆண்டு வரை 82 முறை நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இன்று வரை கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை நூறைத் தாண்டும். 1994 முதல் 2004க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர், 13 பேர் இறந்துள்ளனர். வெளியில் தெரியாமல் பல இறப்புகள் மூடி மறைக்கப்பட்டு விட்டதாக சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையின் தீய விளைவுகளை உணர்ந்ததால் தான் அந்த ஆலையை மூடும்படி 2010-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. எனினும், 2013ஆ-ம் ஆண்டில் ரூ.100 கோடி அபராதம் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் தான் ஆலையை இயக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், அதற்கு பிந்தைய 5 ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கடைபிடிக்கவே இல்லை. ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதியில் நிலப்பகுதியிலும், கடல் பகுதியிலும் ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. இவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலையை இப்போது மட்டுமின்றி, எப்போதுமே திறக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்டது என்பதாலேயே, அந்த ஆலைக்கு எதிரான மக்களின் போர் முடிவுக்கு வந்து விட்டதாக அர்த்தமல்ல. கடந்த காலங்களில்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் தடை விதித்த போதெல்லாம், உச்சநீதிமன்றத்தை அணுகி அந்த தடையை ஸ்டெர்லைட் தகர்த்தது மறக்கக்கூடாத வரலாறு ஆகும்.

எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் அங்கு மிகவும் வலிமையான வாதங்களை முன்வைத்து, அழிவை ஏற்படுத்தும் ஆலை நிரந்தரமாக மூடப் படுவதையும், ஆலையின் கட்டமைப்புகள் அகற்றப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும், என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். 

Read Also | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு: சென்னை HC தீர்ப்பு!!

Trending News