வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது!
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தற்போது மழை நின்றுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
"கேரள மாநிலத்தில் நூறாண்டு காலத்தில் ஏற்படாத இயற்கைப் பேரிடராக நேர்ந்த பிரளயம் போன்ற வெள்ளப் பெருக்கால் அம்மாநிலமே தண்ணீரில் தத்தளிக்கிறது. கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, அவர்கள் வேண்டுகிற நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கேரள மாநில அரசுக்கு பத்து இலட்சம் ரூபாய் நிதி வழங்குகிறது. மேலும் தேவையான நிவாரணப் பொருட்களைச் சேகரித்து அனுப்புகிறது." என குறிப்பிட்டுள்ளது!