ஆரல்வாய்மொழி அருகே உள்ள விசுவாசபுரம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 54). முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலையில் வேலை நிமித்தமாக வீட்டில் இருந்த ரூ. 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு காரில் வடக்கன் குளத்திற்கு புறப்பட்டார்.
அவர் செல்லும் போதே தோவாளையில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்தார். அந்த பணத்தை ஏற்கனவே வைத்திருந்த பணத்துடன் சேர்த்து மொத்தம் ரூ.2½ லட்சத்தை ஒரு பையில் வைத்தார். பின்னர் அதை காரின் முன் இருக்கையில் வைத்து கொண்டு ஆரல்வாய்மொழிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த பாரத ஸ்டேட் வங்கி முன்பு இடதுபக்கமாக காரை நிறுத்திவிட்டு காரின் கதவுகளை பூட்டிவிட்டு வங்கியின் ஏ.டி.எம்.முக்குள் சென்றுவிட்டு 5 நிமிடத்தில் திரும்பி வந்தார்.
அதற்குள் காரின் முன்பகுதியில் இடதுபுறம் உள்ள கண்ணாடி உடைந்து கிடந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே காரை திறந்து உள்ளே பார்த்தார். அப்போது அவர் பணம் வைத்திருந்த பையை காணவில்லை. காரின் கண்ணாடியை உடைத்து ரூ.2½ லட்சத்தை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
ALSO READ | விசாரணை அறிக்கை தர 25 ஆயிரம் லஞ்சம் - பெண் இளநிலை உதவியாளர் கைது.
உடனே ஜேம்ஸ் அவருடைய நண்பருக்கு தகவல் சொல்லி வரவழைத்தார். பின்னர் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, சப் -இன்ஸ்பெக்டர் மாரிசெல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் சரிவர தெரியவில்லை. அதைத்தொடர்ந்து அருகில் இருந்த கடையில் உள்ள கேமராவை ஆய்வு செய்த போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வருவது பதிவாகி இருந்தது. கார் நின்றதும், சற்று தூரத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி ஓடி சென்று காரில் இருந்த பையை கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏற ஓடுவதும் பதிவாகியிருந்தது.
மேலும் காரின் பின் புற டயர் பஞ்சராகி இருந்தது. ஜேம்ஸ் காரை தோவாளையிலிருந்து ஓட்டிவரும்போது ஆரல்வாய்மொழி பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் ஜேம்சிடம் இடம் உங்கள் கார் டயர் பஞ்சராகி உள்ளது என கூறியுள்ளார்.
இதை வைத்து பார்க்கும் போது கொள்ளையில் ஈடுபட்டவர்களே கார் டயரை பஞ்சராக்கி இருப்பார்கள் என போலீசார் கருதுகிறார்கள். எனவே வங்கியில் முன்னாள் ராணுவ வீரர் பணம் எடுப்பதை நோட்டமிட்டே இந்த கொள்ளையை மர்ம ஆசாமிகள் அரங்கேற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
ALSO READ திமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு
அந்த சந்தேகத்தை உறுதிசெய்யும் வகையில் தோவாளை வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த துணிகர கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் எப்போதும் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ALSO READ மகளை தாக்கி ஆபாசமாக பேசியதால் தந்தை தீக்குளிக்க முயற்சி -கோவையில் பரபரப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR