சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை, தமிழக மக்கள் வரவேற்று உள்ளனர்.
இதுக்குறித்து திமுக தலைவரும் மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவரும் ஆனா மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தமிழக அரசே முடிவு செய்யலாம் என்பதுதான் தலைவர் கலைஞர் அவர்கள் ஆரம்பம் தொட்டே வலியுறுத்தி வந்த கழகத்தின் நிலைப்பாடாகும்.
மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும். கடந்த 27 வருடங்களாக சிறையில் வாடிவதங்கிக் கொண்டிருக்கும் அவர்களை, மேலும் காலதாமதம் ஏதுமின்றி விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.