மழையின் எதிரொலி: இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர்அணை!
ஒரே ஆண்டில் 2 வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டியது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1.10 லட்சம் கன அடி நீர்வரத்து. 2004 ஆம் ஆண்டு 4 முறை முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் உள்ள அணைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் கனஅளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 70,000 கனஅடி நீரும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
மொத்தமாக 1,25,000 கனஅடி நீர் என்ற அளவில் தற்போது வந்துகொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாவதால், அணை அதன் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. நடப்பாண்டில் இரண்டாவது முறையாகவும், வரலாற்றில் 40வது முறையாகவும் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக டெல்டா மாவட்ட கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒக்கேனக்கல் அருவியில் இருந்தும் 1,43,000 கனஅடி நீர் என்ற அளவில் நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.