Olympics: நாகநாதன் பாண்டி - கட்டுமானத் தொழிலாளர் முதல் ஒலிம்பிக் வீரர் வரை…

விளையாட்டு என்பது தேவையற்ற ஆடம்பரம் என்ற நிலையில் தனது திறமையையும், விருப்பத்தையும் நிறைவேற்ற கடும் போராட்டங்களை சந்தித்த தமிழக வீரர் நாகநாதன் பாண்டி, ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக தடம் பதிக்கிறார்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 9, 2021, 09:55 PM IST
  • நாகநாதன் பாண்டி - கட்டுமானத் தொழிலாளர் முதல் ஒலிம்பிக் வீரர் வரை
  • காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் விளையாட்டு வீரர்
  • தடகளப் போட்டிகளில் தடைகளை தாண்டி சாதிக்கும் ஒலிம்பிக் வீரர்
Olympics: நாகநாதன் பாண்டி - கட்டுமானத் தொழிலாளர் முதல் ஒலிம்பிக் வீரர் வரை… title=

சென்னை: கட்டுமானத் தொழிலாளியாக இருந்து ஒலிம்பிக் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கும் எளிமையான இளைஞர் நாகநாதன் பாண்டி. இவரது இந்த பயணம் எளிதானதல்ல. கட்டுமானத் தொழிலாளியான பாண்டி தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து, அங்கிருந்து சென்று ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 

25 வயது நாகநாதனின் விளையாட்டுக் கனவு ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. கட்டுமானத் தொழிலாளியாகவும் விவசாயத் தொழிலாளியாகவும் பணியாற்றிய பெற்றோரின் ஐந்து குழந்தைகளில் ஒருவரான நாகநாதன் 15 வயதில் இருந்து கட்டுமானத் தொழிலாளராக பணியாற்றியிருக்கிறார்.  

10 ஆம் வகுப்பு படிக்கும்போது, அவரது விளையாட்டுத் திறன் வெளிப்பட்டது. ஆனால், அவரது திறமையை மேம்படுத்த போதுமான வசதிகள் இல்லை. ஓட்டப் பயிற்சி செய்வதற்கு தேவையான காலணிகள் இல்லை என்றாலும் வெறுங்காலுடன் ஓடினார். தனது பள்ளியின் உடல் பயிற்சி பயிற்சியாளரின் ஆதரவுடன் அவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் கலந்துக் கொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்தார். அவரது திறமையைப் பார்த்து, 12 ஆம் வகுப்பில் படிக்கும்போது, பள்ளி நிர்வாகம் அவருக்கு ஒரு ஜோடி காலணிகளை பரிசளித்தது.

Also Read | Tokyo Olympics போட்டிகளில் எதிர்கொள்ளும் சவால்கள் புதுமையானவை

சரித்திரத்தில் இளங்கலை பட்டம் பெற்ற நாகநாதன், கல்லூரியில் படிக்கும்போது பல்கலைக்கழக நிலையில் 49 வினாடிகளில் 400 மீட்டர் தூரம் ஓடி தங்கப் பதக்கம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.   பெங்களூரில் நடந்த அகில இந்திய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றதற்கான சான்றிதழ் தான் அவருக்கு, விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ், மாநில காவல் துறையில் வேலை கிடைக்க உதவியது.

2017 இல் கான்ஸ்டபிளாக தமிழக காவல்துறையில் சேர்ந்த நாகநாதன் பாண்டி, பணி நேரத்தைத் தவிர ஓய்வு நேரத்தில் தொடர்ந்து பயிற்சி செய்தார்.  2019 முதல், நாகநாதன் விளையாட்டு போட்டிகளில் முன்னணி வீரராக மாறினார். சண்டிகரில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை போட்டிகளில் 400 மீட்டர் தனிநபர் மற்றும் ரிலே போட்டிகளில் தங்கம் வென்றார்.   இந்தியன் கிராண்ட் பிரிக்ஸில் 400 மீ. ஃபெடரேஷன் கோப்பையில் 46.09 வினாடிகளில் 400 மீட்டர் ஓட்டத்தை முடித்தார்.

அவரது இந்த சாதனை தான் அவரை ஒலிம்பிக் போட்டிகளுக்கான வழியை திறந்துவிட்டது. பாட்டியாலாவில் உள்ள இந்திய ஒலிம்பிக்ஸ் பயிற்சி முகாமில் நாகநாதன் பயிற்சியைத் தொடங்கினார்.   

Also Read | COVID Olympics: பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள்; எமர்ஜென்சியை அறிவித்தது ஜப்பான்

இன்றுவரை, அவரது பயிற்சி மற்றும் அடிப்படை செலவுகளுக்கு அவரது நண்பர்கள் தொடர்ந்து உதவுகின்றனர். தேசிய அளவில் பெரிய வெற்றி கிடைக்கும் வரை, நாகநாதன் தனது தடகள பயிற்சி மற்றும் சாதனைகளைப் பற்றி பெற்றோரிடம் கூட சொல்லவில்லையாம்!

தனது படிக்காத பெற்றோர் இதனால் கவலைப்படலாம் என்றே அவர்களுக்கு சொல்லவில்லை என்கிறார் நாகநாதன். அவரது பெற்றோரின் பார்வையில், விளையாட்டு என்பது தேவையற்ற ஆடம்பரம் என்ற நிலையில் தனது திறமையையும், விருப்பத்தையும் சொல்ல முடியவில்லை என்று வருத்தப்படுகிறார் நாகநாதன்.

தற்போது பெற்றோருக்கு ஒலிம்பிக் பற்றியும்,  தனது சாதனைகள் குறித்தும் சகோதரர்கள் எடுத்து சொல்லி புரியவைத்திருப்பதாக மகிழ்ச்சியடைகிறார் இந்த விளையாட்டு வீரர். இந்தியாவிற்கு பதக்கம் வாங்கிக் கொடுப்பது தான் தனது கனவு என்று சொல்லும் நாகநாதன் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை நாட்டுக்கே இருக்கிறது… வாழ்த்துக்கள் நாகநாதன்…   

Also Read | ஜூன் மாத ஐ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலுக்கு 2 இந்திய வீராங்கனைகள் பரிந்துரை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News