தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் பிளவு பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிமுக சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளவு பட்டுள்ள இரு அணிகளையும் மீண்டும் இணைப்பது குறித்து இறுதி கட்ட ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக அணிகள் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வமும் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் செய்தி வெளியானதால், விரைவில் இரு அணிகளும் ஒன்றாக இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
இந்நிலையில், தேனியில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் எங்களின் உறுதியான நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வானது அ.தி.மு.க. சட்டவிதிகளுக்கு புறம்பானது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை போக்கும் வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
அ.தி.மு.க. எந்த ஒரு குடும்பத்தின் பிடியிலும் செல்லக் கூடாது என்பது எம்.ஜி.ஆரின் நிலைப்பாடாக இருந்தது. கட்சியிலும் ஆட்சியிலும் அந்த குடும்பத்தின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பது அம்மாவின் கொள்கை.
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு நான் தயாராக இருப்பதாக வெளியான தகவல் தவறானது. இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக சமரசம் செய்வதற்கு குழு வந்தால் வரவேற்பேன்.
ஆர்கே நகரில் ஓட்டுக்கு ரூ. 4 ஆயிரம் கொடுத்ததுடன் பல முறைகேடுகளையும் செய்தனர். வருமான வரித்துறை பல்வேறு சோதனைகளை நடத்தி விஜயபாஸ்கர் மற்றும் பலரது வீட்டில் பல கோடி ரூபாய் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியது மீடியாக்களில் செய்தி வந்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை வர உள்ள நிலையில், தீர்ப்பை தங்களுக்கு சாதகமாக பெற பணம் கொடுத்து முயற்சி செய்தனர். இதன் மூலம் தவறுக்கு மேல் தவறு செய்து அதிமுகவுக்கும், தமிழகத்திற்கும் அவப்பெயர் உருவாக்கியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சரா ஏற்பீர்களா? என்ற கேட்டதற்கு, நடக்காதை ஏன் பேச வேண்டும்? என்றார் ஓ.பன்னீர்செல்வம்.