அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு சுங்கக்கட்டண விலக்கு தர வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில்., "நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 530-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அனைத்திலும் நாளை முதல் மீண்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஊரடங்கு எந்த அளவுக்கு தளர்த்தப்படும் என்பதே உறுதியாகாத நிலையில், அவசர, அவசரமாக சுங்கக்கட்டண வசூலைத் தொடங்குவது நியாயமற்ற செயல் ஆகும்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கத்துடன் மார்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்தே தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது. இரண்டாம் கட்ட ஊரடங்கு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், நாளை முதல் சில தளர்வுகளை நடைமுறைப்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் மாநில அரசுகள் சில தளர்வுகளை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு கூட வராத நிலையில், இன்று நள்ளிரவு முதலே சுங்கக்கட்டண வசூல் தொடங்கும் என அறிவித்திருப்பது நாடு இப்போது எதிர்கொண்டு வரும் சூழலை அறியாமல், வணிகத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தவறான முடிவாகும்.
25 நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதன் பயனாக கொரோனா பரவல் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது உண்மை. எனினும், ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட இன்னும் பல கட்டங்களைக் கடக்க வேண்டும். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும் கூட சில மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் போக்குவரத்துக்கு திறக்கப்படுமா? என்பது தெரியவில்லை. நாடு முழுவதும் தடையற்ற, முழுமையான சாலைப் போக்குவரத்து தொடங்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம். அதுவரை உணவு தானியங்கள், வேளாண் விளைபொருட்கள், மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து மட்டுமே நடைபெறும். அத்தகைய சூழலில் மீண்டும் சுங்கக்கட்டணம் வசூலிப்பது என்பது, அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவை அதிகரித்து, அவற்றின் விலைகள் கண்மூடித்தனமாக உயர்வதற்கு மட்டுமே வழிவகுக்கும்.
ஊரடங்கு ஆணை காரணமாக பல மாவட்டங்களில் உள்ளூர் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. அதனால், வடக்கு, மேற்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் அனைத்தும் சென்னை கோயம்பேடு சந்தைக்குத் தான் கொண்டு வரப்படுகின்றன. அவற்றுக்கான விலையில் பெரும்பகுதி வாகன வாடகைக்கே சென்று விடும் நிலையில், மிகக்குறைந்த தொகையே உழவர்களுக்கு கிடைக்கிறது. சாலைகளில் சுங்கவரி மீண்டும் வசூலிக்கப்பட்டால், உழவர்களுக்கு கூடுதல் இழப்பு ஏற்படுவதுடன், சந்தையிலும் காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயரும். அதேபோல், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் அரிசி, மளிகை சாமான்கள், வெங்காயம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் விளையும் காய்கறிகள், பிற அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகளும் சுங்கக்கட்டண வசூல் காரணமாக கண்டிப்பாக உயரும். தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விலை உயரும்; அனைத்து மாநில மக்களும் பாதிக்கப்படுவர்.
இந்தியாவில் சாலைகளுக்கான சுங்கக்கட்டணம் என்பதே மக்கள் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் நடத்தப்படும் பொருளாதார தாக்குதல் தான். இந்திய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும், அதன் விற்பனையின் போதே வாழ்நாள் முழுமைக்குமான சாலை வரி வசூலிக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி, ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 22.98 ரூபாயும், ஒரு லிட்டர் டீசல் மீது 18.83 ரூபாயும் கலால் வரியாக வசூலிக்கப்படுகின்றன. இவற்றில் தலா ரூ.10 வீதம் சாலை கட்டமைப்பு நிதியாக வழங்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் சராசரியாக 10 டன் சரக்கு ஏற்றிச் செல்லும் சரக்குந்து, சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்ல 1762 ரூபாயும், சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல 875 ரூபாயும் சாலை கட்டமைப்பு நிதிக்கு செலுத்துகின்றன. இது சுங்கக்கட்டணத்தை விட அதிகம். இவ்வளவுக்குப் பிறகும் தனியாக சுங்கக்கட்டணம் வசூலிப்பதை எந்த வகையில் ஏற்க முடியும்; நியாயப்படுத்த முடியும்?
கொரோனா தாக்குதலால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் மக்கள் மீது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூடுதல் சுமையை சுமத்தக்கூடாது. அதுமட்டுமின்றி, சுங்கக்கட்டணம் வசூலிக்கும் போது சுங்கச்சாவடிகளில் அதிக கூட்டம் சேரும். அது கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கக்கூடும். எனவே, கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக விலகும் வரை சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நெடுஞ்சாலைகள் ஆணையம் கைவிட வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால், நிலைமை சீரடையும் வரை அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு மட்டுமாவது சுங்கக்கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.