உயர்கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் தொடங்கி அலுவலக உதவியாளர் நியமனம் வரை அனைத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பெரியார் பல்கலை பேராசிரியர் நியமன குறித்து அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அதிகளவில் ஊழல் நடக்கும் துறைகளில் ஒன்றாக உயர்கல்வித்துறை மாறி வருகிறது. துணைவேந்தர் நியமனத்தில் தொடங்கி அலுவலக உதவியாளர் நியமனம் வரை அனைத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. கோடிகளை கொட்டிக் கொடுத்து துணைவேந்தர் பதவி வாங்கியவர்கள் அதை பல மடங்காக பெருக்கி எடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் கடைசி நாளில் கூட கையூட்டு வாங்கிக் குவிக்கின்றனர். இதைத் தடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்புக்கான விரிவாக்கப்பட்ட மையம் தருமபுரியில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் மொத்தம் 8 பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பும், 6 பிரிவுகளில் முனைவர் பட்ட ஆய்வும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில் உயிரி தொழில்நுட்பம், நிலவியல் ஆகிய துறைகள் அண்மையில் தான் தொடங்கப்பட்டன என்பதால் அவற்றுக்கு தலா 4 உதவிப் பேராசிரியர்கள், ஓர் இணைப்பேராசியர் என மொத்தம் 10 ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அடுத்த இரு வாரங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், அதன் பின் தொடர் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிகளுக்காக விண்ணப்பித்த பலரும் பல்கலைக்கழக நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது, பொறுப்பான பதில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அந்த பணிகளுக்கு வரும் 24-ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என அறிவித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. 24-ஆம் தேதி நேர்காணல் முடிந்தவுடன் 25-ஆம் தேதி ஆட்சிக்குழு கூட்டத்தில் புதிய நியமனங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, அன்று மாலையே பணி நியமன ஆணைகளை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணிகளுக்காக விண்ணப்பித்தவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேரம் நடத்தி யாருக்கு பணி வழங்குவது என்பது தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும், வரும் 24-ஆம் தேதி பெயரளவில் நேர்காணல் நடத்தி உதவிப் பேராசியர் பணிக்கு தலா ரூ.35 லட்சம் வீதமும், இணைப்பேராசிரியர் பணிக்கு ரூ.45 லட்சம் வீதமும் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்பட்டு வரும் விதிகள் மற்றும் மரபுகளின்படி ஆள்தேர்வுக்காக அறிவிக்கை வெளியிடப்பட்ட 6 மாதங்களில் அது குறித்த அனைத்து நடைமுறைகளும் நிறைவேற்றி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு முடிக்கவில்லை என்றால் புதியதாக ஓர் அறிவிக்கை வெளியிட்டு, அதனடிப்படையில் புதிய நியமனங்களைத் தான் மேற்கொள்ள வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் தேர்வுக்காக அறிவிக்கை வெளியிட்டு 10 மாதங்கள் உறங்கிக் கொண்டிருந்த பெரியார் பல்கலைக்கழகம், இப்போது திடீரென ஒரு நாளில் நேர்காணல் நடத்தி, அடுத்த நாளே நியமன ஆணை வழங்கத் துடிப்பது ஏன்? பல்கலைக்கழக பணிகளுக்கான விண்ணப்பங்களை இரு வாரங்களில் அனுப்ப வேண்டும் என்று அவசரம் காட்டும் பல்கலைக்கழகம் நேர்காணலை நடத்துவதில் மட்டும் 10 மாதங்களுக்கு மேலாக முடங்கிக் கிடந்தது ஏன்? அனைத்துக்கும் காரணம் ஊழல்.... ஊழல் மட்டுமே.
தருமபுரி பட்ட மேற்படிப்பு விரிவாக்க மையத்திற்கான ஆசிரியர் தேர்வு அறிவிக்கை கடந்த ஜூலை மாதமே வெளியிடப்பட்ட போதிலும், அதற்காக விண்ணப்பித்தவர்களில் பலர் அப்போது பல்கலைக்கழக துணைவேந்தரின் விருப்பங்களை நிறைவேற்ற முன்வரவில்லை. இதனால் அப்போது இந்த நியமனம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆனால், பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சுவாமிநாதனின் பதவிக்காலம் ஜூன் 15&ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதற்குள் அனைத்து காலியிடங்களையும் நிரப்பி பெரும்பணம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கான நேர்காணலுக்கு அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நியமனங்களில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்ததை அடுத்து, தமிழக உயர்கல்விச் செயலாளர் சுனில் பாலிவால் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் துணைவேந்தர்களில் பதவிக்காலத்தின் கடைசி 3 மாதங்களில் எந்த விதமான நியமனங்களையும், கொள்கை முடிவுகளையும் மேற்கொள்ளக் கூடாது என தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. பெரியார் பல்கலைக்கழக துனைவேந்தர் ஓய்வு பெற இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் உயர்கல்வித்துறை செயலாளரின் உத்தரவையும் மீறி ஆசிரியர்களை நியமிப்பதை ஏற்க முடியாது. இது ஊழல் செய்வதற்கான நியமனம் என்பது உறுதி.
எனவே, இந்த விஷயத்தில் தமிழக ஆளுனரும், உயர்க்கல்வித்துறை செயலாளரும் தலையிட்டு இந்த பணி நியமனங்களை தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழக பல்கலைக்கழகங்களில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தவும் ஆணையிட வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.