பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி என்ன பயன்? ராமதாஸ் கேள்வி!!

Last Updated : Jul 21, 2017, 11:00 AM IST
பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி என்ன பயன்? ராமதாஸ் கேள்வி!! title=

பத்திரிகையாளர்களுக்கு தகுந்த காலத்தில் ஓய்வூதியம் தராமல், ஓய்வூதியம் உயர்த்தி என்ன பயன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் மாத ஓய்வூதியம் 8,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 4750 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுவது வரவேற்கத்தக்கது தான் என்ற போதிலும், இதனால் பயனடைவோரின் எண்ணிக்கையை நினைக்கும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பயனடைவோர் வெறும் 163 பேர் தான் என்பதும், குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 35 பேர் மட்டும் தான் என்பதும் பலருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் ஊடகத் துறை அடைந்துள்ள வளர்ச்சி அபரிமிதமானது. இன்றைய நிலையில் தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியிருக்கும். 60 வயதைக் கடந்த பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும். அவர்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் ஓய்வூதியம் தேவைப்படும் நிலையில் தான் உள்ளனர் எனும் போது அவர்களில் 163 பேருக்கு மட்டுமே ஓய்வூதியம் என்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களில் 80% பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாத நிலையில் அதை உயர்த்துவதால் என்ன பயன்?

ஆனாலும் ஓய்வூதியம் தேவைப்படும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்காததற்கு காரணம் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலத்திற்கு ஒவ்வாத விதிகள் தான். அரசு விதிகளின்படி பத்திரிகையாளர்கள் பணிக்காலத்தில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.2 லட்சம், அதாவது மாதத்திற்கு ரூ.16,666&க்கும் மேல் ஊதியம் பெற்றிருந்தால் அவர்கள் ஓய்வூதியம் பெறத் தகுதியற்றவர்கள் ஆவர். ஒருவர் 25 வயதில் பத்திரிகையாளராக பணியில் சேர்ந்தால் ஓய்வூதியம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 35 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். பணியில் சேரும்போது ரூ.1000 மாத ஊதியம் பெற்றிருந்தால் கூட 35 ஆண்டுகள் அனுபவத்தில் அவரது ஊதியம் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரத்தைத் தாண்டியிருக்கும்.

இன்றைய காலத்தில் ரூ.25,000 ஊதியம் என்பது ஒரு விஷயமே அல்ல. இந்த ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவதே சிரமம் எனும் போது சேமிப்புகளைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது. அப்படிப்பட்டவர்கள் பணி ஓய்வு பெறும் போது ஓய்வூதியம் வழங்கப்படாவிட்டால் அவர்களால் எப்படி வாழ்க்கையை நகர்த்த முடியும். வெளியிலிருந்து பார்க்கும் போது பத்திரிகையாளர் பணி என்பது கவர்ச்சிகரமானதாக தோன்றினாலும் அது மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த பணியாகும். பத்திரிகையாளர்களில் பலர் லட்சங்களில் ஊதியம் பெறுவதுண்டு என்றாலும் கூட அவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் எண்ணிக்கையில் 2% கூட இருக்காது. மீதமுள்ள பத்திரிகையாளர்களின் ஊதியம் 5 இலக்கத்தைத் தொடுவதற்கே பெரும்பாடு பட வேண்டியிருக்கும்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று இன்னொரு ஊதிய உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஊதியம் ரூ.55 ஆயிரத்திலிருந்து கிட்டத்தட்ட இருமடங்காக்கி ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் ரூ.2000 மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒளிவுமறைவின்றி பேச வேண்டுமானால் பேரவை உறுப்பினர்களை விட பத்திரிகையாளர்களுக்கு தான் ஓய்வூதியம் மிகவும் அவசியம் ஆகும். ஆனால், ரூ.1.05 லட்சம் ஊதியம் வாங்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு நாள் பணியாற்றினாலும் கூட எந்த நிபந்தனையுமின்றி, மாதம் ரூ.15,000 ஓய்வூதியம் வழங்கப்படும் நிலையில், பத்திரிகையாளர்கள் 35 ஆண்டுகள் உழைத்தாலும் மாதத்திற்கு ரூ.16,666 ஊதியம் வாங்கினால் ஓய்வூதியம் கிடையாது என்பது எவ்வகையிலும் நியாயமல்ல.

ஜனநாயகத்தின் 4-வது தூணாக விளங்குபவர்கள் பத்திரிகையாளர்கள். காலம் நேரம் பாராமல் உழைக்கின்ற பத்திரிகையாளர்கள், ஒய்வு பெற்ற பின், மன நிறைவோடும், மன அமைதியோடும் வாழ்ந்திட வேண்டும் என்று முதலமைச்சரே கூறியுள்ள நிலையில், அதை சாத்தியமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஊதிய உச்சவரம்பு இல்லாமல் ஓய்வூதியம் வழங்க முன்வர வேண்டும். இதற்காக சிறப்பு முகாம் நடத்தி ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.15,000 ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Trending News