நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-வின் வெற்றிக்கு பாமகவினர் உழைக்க வேண்டும் என அக்கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. அந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவை இடைத்தேர்தல்களுக்கான வேட்பாளர்களை அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து விட்ட நிலையில், வேட்புமனுத் தாக்கல், பரிசீலனை, மனுக்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்து மே 2-ஆம் தேதி வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே 4 தொகுதி இடைத்தேர்தல்களில் பரப்புரை தீவிரமடையக் கூடும்.
மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி உடன்பாட்டின்படி இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதையும் கடந்து, அவர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டிய கடமை பா.ம.க.வுக்கு உள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையின் போது அதிமுக கூட்டணி கட்சியினரிடையே அற்புதமான ஒருங்கிணைப்பு நிலவியது. எந்தத் தொகுதியில் எந்தக் கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார் என்று பகுத்துப் பார்க்காமல் அனைத்துத் தொகுதிகளிலும் நமது வேட்பாளர் தான் போட்டியிடுகிறார் என்று கருதி அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பணியாற்றினார்கள். அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட உழைப்பின் காரணமாகத் தான் கடந்த 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற தமிழகத்தின் 38 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களின் உறுதியான வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.
நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் அதே ஒருங்கிணைப்பு மற்றும் அசாத்தியமான தேர்தல் பணிகள் தொடர வேண்டும். 4 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உறுதியாக வேண்டும். அதை மனதில் கொண்டு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பாமக கடுமையாக உழைக்க வேண்டும். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் அடங்கியுள்ள கோவை, கரூர், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களையும், அவற்றை ஒட்டிய மாவட்டங்களையும் சேர்ந்த பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிமுக தேர்தல் குழுவுடன் இணைந்து வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டும்.
கூட்டணி அறத்தைக் கடைபிடிப்பதில் முதலிடத்தில் உள்ள கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி என்பதை அனைவரும் அறிவார்கள். அது இந்த இடைத்தேர்தல்களிலும் நிரூபிக்கப்பட வேண்டும். அதற்காக அதிமுகவினரும், மற்ற கூட்டணிக் கட்சியினரும் எந்த அளவுக்கு தீவிரமாக பரப்புரையில் ஈடுபடுகிறார்களோ, அதை விட 3 மடங்கு தீவிரமாக பா.ம.க.வினர் தேர்தல் பணியாற்ற வேண்டும்; 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.