2G அலைக்கற்றை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உற்சாகத்துடன் குவிந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கழக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறினார்.
தொடர்ந்து, கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களுடன் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்ற தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைவர் கலைஞர் அவர்களிடம் தீர்ப்பு விவரங்களை தெரிவித்தார். முன்னதாக, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதையடுத்து, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியது:
‘அநீதி வீழும், அறம் வெல்லும்’, என்று தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்கனவே 2ஜி வழக்குபற்றி ஒரே வரியில் தெரிவித்து இருந்தார். அதன்படி, இன்றைக்கு வழங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பின் மூலம் அநீதி வீழ்ந்திருக்கிறது, அறம் வென்றிருக்கிறது.
நானும், கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களிடம் தீர்ப்பு விவரங்களை தெரிவித்தோம். மிகுந்த மகிழ்ச்சியோடு பேராசிரியர் அவர்களிடமும், என்னிடமும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
திமுகவுக்கு எதிரான பல கட்சிகள் மட்டுமல்ல, பல்வேறு ஊடகங்களும் இணைந்து, திட்டமிட்டு திமுகவை களங்கப்படுத்த எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றனர். அதற்கு உதாரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலை சுட்டிக்காட்ட முடியும்.
ஆனால், இன்றைக்கு அது முறியடிக்கப்பட்டு இருக்கிறது. எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. திமுகவை களங்கமற்றது என்பது தீர்ப்பின் மூலமாக வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களை பொறுத்தவரை இந்த தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே, ஆளுங்கட்சியாக இருந்தாலும், அதேபோல அதிலிருந்து பிரிந்துள்ள இன்னொரு அணியாக இருந்தாலும், அனைவரும் டெபாசிட் தொகையை இழக்கும் நிலையில் தான், 24 ஆம் தேதியன்று வெளியாகவுள்ள தேர்தல் முடிவு இருக்கும். எனவே, தீர்ப்புக்கும் தேர்தல் முடிவுக்கும் தொடர்பில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.