நல்ல நாள் வரும் என்று கூறி ஏமாற்றி விட்டார்கள்: மத்திய அரசை தாக்கிய ப.சிதம்பரம்

பாஜக தலைமையிலான மோடி அரசின் மோசமான முடிவுகளால் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. நல்ல நாள் வரும் என்று கூறிவிட்டு, தற்போது இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள் என மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ப.சிதம்பரம்

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Dec 5, 2019, 06:02 PM IST
நல்ல நாள் வரும் என்று கூறி ஏமாற்றி விட்டார்கள்: மத்திய அரசை தாக்கிய ப.சிதம்பரம்
Pic Courtesy : ANI

புது டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பொருளாதாரத்தை கையாளுவதில் உள்ள குறைகளை குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று (வியாழக்கிழமை) கடுமையான தாக்குதலை நடத்தினார். இந்த அரசாங்கத்தால் பொருளாதாரத்தை பிரச்சினைகளை சரியாக கண்டறிய முடியவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது எனக் கூறினார்.

“நோய் என்ன என்று கண்டறிந்தால் தான் மருந்து தர முடியும். நோயை கண்டறிவதில் தவறு இருந்தால், மருந்து பயனற்றதாக இருக்கும். அது மிகவும் ஆபத்தானது. நிதியாண்டில் 7 மாதங்களுக்குப் பிறகும், பொருளாதாரம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சாதாரணமானவை என்று பாஜக அரசு நம்புகிறது. பொருளாதாரம் குறித்து சரியான பிரச்சனையை மத்திய அரசுக்கு தெரியவில்லை. அது தவறு எனக் கூறிய ப.சிதம்பரம் சுமார் 900 வார்த்தைகளில் தனது மத்திய அரசின் பொருளாதாரம் நிலை குறித்து தாக்குதலை தொடர்ந்தார்.

பாஜக தலைமையிலான மோடி அரசின் மோசமான முடிவுகளால் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. பணமதிப்பிழப்பு, வரி கொள்ளை, ஜி.எஸ்.டி போன்ற காரணங்களால் ஜிடிபி மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து மத்திய அரசு தவறு மேல் தவறு செய்து வருகிறது. நல்ல நாள் வரும் என்று கூறிவிட்டு, தற்போது இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் இதுக்குறித்து பிரதமர் மோடி வாய் திறப்பதே இல்லை எனக் மத்திய அரசு தாக்குதலை தொடர்ந்தார். 

கடந்த ஆறு காலாண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது எனக் கூறி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்களை பட்டியலிட்டு, சரிந்து வரும் பொருளாதாரத்தின் நிலையை விளக்கினார்.

இன்று (வியாழக்கிழமை) காங்கிரஸ் தலைமையகத்தில் அவர் ஆற்றிய உரை,முதலில் காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையுடன் தொடங்கியது. "சுதந்திரம் பிரிக்க முடியாதது. நம்முடைய சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால், சுதந்திரத்திற்காக நாம் போராட வேண்டும்" என்று அவர் கூறினார்.

தனக்கு எதிரான வழக்கைப் பற்றி நான் பேசவில்லை என்று ப.சிதம்பரம் தெளிவாக கூறினார். ஆனால் அவர் பொருளாதாரத்தைப் பற்றி கடுமையான விமர்சனத்தைத் தொடங்குவதற்கு முன்பு, ஒரு அமைச்சராக தனது நடவடிக்கையும், எனது மனசாட்சியும் முற்றிலும் தெளிவாக இருந்தன எனக் தெரிவித்தார். 

நேற்று (புதன்கிழமை) காலை உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் வழங்கும் விசாரணையில், நீதிபதி ஆர் பானுமதியின் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது, ஆனால் முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று அவருக்கு உத்தரவிட்டது. மேலும் அவருக்கு 2 லட்சம் தனிநபர் பத்திரமும், அதே அளவு இரண்டு ஜாமீன்களும் வழங்குமாறு உத்தரவிட்டது. எந்தவொரு பத்திரிகை நேர்காணல்களையும் அல்லது வழக்கைப் பற்றி எந்தவொரு அறிக்கையையும் வழங்குவதைத் தவிர்க்குமாறு உயர் நீதிமன்ற பெஞ்ச் அவருக்கு உத்தரவிட்டதுடன், சாட்சிகளை செல்வாக்கு செலுத்துவதற்கும் அல்லது சாட்சியங்களை கலைப்பதற்கும் எதிராகவும் எச்சரித்தது.

இதனையடுத்து, 106 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு சிறையில் இருந்து வெளியே வந்த அவர், "106 நாட்களுக்குப் பிறகு சிறைக்கு வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.