குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெசன்ட்நகர் பேருந்து பணிமனை அருகே 50க்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் இதுவரை இந்தச் சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் கண்டுள்ளன. முன்னதாக இந்த சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் காவல்துறையினருடன் மோதல் நடத்தியதில், இரு தரப்பு மக்களும் காயமடைந்ததை அடுத்து டெல்லியில் நடந்த போராட்டம் கசப்பாக மாறியது.
இந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், இடதுசாரி மாணவ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 23-ம் தேதி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து சென்னையில் பேரணி நடத்த முடிவானது.
இந்நிலையில் தற்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்த பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, சமூக வலைதளங்கள் மூலமாக ஒருங்கிணைந்த 50க்கும் மேற்பட்டோர், திடீரென பெசன்ட்நகர் பேருந்து பணிமனை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.