ஆயுள் தண்டனையை நிறுத்தக்கோரிய பேரறிவாளனின் மனு விசாரணைக்கு ஏற்பு: உச்சநீதிமன்றம்

ஒரு வருடம் கழித்து பேரறிவாளனின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 17, 2019, 09:10 PM IST
ஆயுள் தண்டனையை நிறுத்தக்கோரிய பேரறிவாளனின் மனு விசாரணைக்கு ஏற்பு: உச்சநீதிமன்றம் title=

புதுடெல்லி: தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. வரும் நவம்பர் 5 ஆம் தேதி பேரறிவாளன் மனு மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. 

பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக தன் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஒரு வருடமாகியும், அவரின் மனு மீது எந்தவித விசாரணையும் நடைபெற வில்லை. 

இந்தநிலையில், இன்று திடிரென பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. அடுத்த மாதம் 5 ஆம் தேதி மனு மீது விசாரணை நடைபெறும் எனக் கூறப்பட்டு உள்ளது

கடந்த 1991 ஆண்டு மே 21 ஆம்தேதி ஸ்ரீபெரும்புதூரில் அப்பொழுது பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் உலகமே அதிர்ச்சி அடைந்தது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய  7 பெரும் 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே விசாரணை நீதிமன்றத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அந்த தண்டனையை உச்சநீதிமன்றம் பல்வேறு காலக்கட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. 

அதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனைக்காலமான 14 ஆண்டுகளை ஏற்கனவே சிறைகளில் கழித்துவிட்டதால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகளின்படி அவர்களை விடுதலை செய்யலாம் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அதன் அடிப்படையில் அவர்களை விடுவிப்பதை மத்திய அரசு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவர்களை விடுதலை செய்ய இயலவில்லை. அதன் பிறகு 7 தமிழர்களின் விடுதலை குறித்து மீண்டும் உச்சநீதிமன்றம் கதவு தட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் இந்திய அரசியலமைப்புசட்டத்தின் 161-வது பிரிவின்படி, அவர்களை விடுவிப்பது குறித்து மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பின் அதனடிப்படையில் 2018 செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழக சட்டபைக்கூடி ஆளும் மற்றும் எதிர் கட்சிகள் ஒன்றாக 7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இன்றுவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த முடிவையும் எடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News