சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு, அலுவலகங்களில் ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா பைனான்சியர் அன்புசெழியன், பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறை நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை இன்று 2-வது நாளாக நீடிக்கிறது.
ஏஜிஎஸ் தயாரித்த கடைசி படமான "பிகில்" படத்தில் நடித்த நடிகர் விஜய்யிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் அடுத்த படமான "மாஸ்டர்" படப்பிடிப்பு நடந்து வரும் நெய்வேலியில் இருந்த நடிகரை விஜய்யை நேரில் சென்று அதிகாரிகள் விசாரித்தனர். இதனால் "மாஸ்டர்" படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது. மேலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ள, நடிகர் விஜய்யை சென்னை அழைத்து வரப்படுகிறார் எனவும் கூறப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில் சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அவரின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் சொந்தமான வீடு, அலுவலகம், சினிமா நிறுவனம் மற்றும் பங்குதாராக உள்ள நிறுவனங்கள் உள்பட இடங்களில் சோதனை நடத்தியதாக குறிப்பிட்டனர். மேலும் அன்புசெழியன் வீடு அலுவலகங்களில் நடந்த சோதனையில் ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.