சென்னை: தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நாளை அதாவது மே 2 ஆம் தேதி நடைபெறும்.
பல விதங்களில் மாறுபட்ட தேர்தல்
இந்த சட்டமன்றத் தேர்தல் பல வகைகளில் வேறுபட்டிருந்தது. பல புதிய முகங்களையும், கட்சிகளையும் இம்முறை காண முடிந்தது. காட்சிப்பொருட்களாக மட்டுமல்லாமல், இக்கட்சிகள் வலுவான போட்டிகளாகவும் உருவெடுக்கும் வல்லமை படைத்தவையாகத் தோன்றின. பரப்புரைகளில் புதிய முகங்களுக்கும், புதிய கூட்டணிகளுக்கும், புதிய கட்சிகளுக்கும் கூடிய மக்கள் கூட்டம் அதை உறுதிப்படுத்தியது.
வரவேண்டிய நேரத்துல.... கரெக்டா வராம போன பிரபலங்கள்
இந்த தேர்தலில் (Election) மிகப்பெரிய ஆதிக்கமாக, மக்கள் வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தியாக இருப்பார் என நம்பப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழக மக்களை வெகுவாக ஏமாற்றினார் என்றே கூறலாம். கட்சி துவக்குவதாக அறிவித்து, கட்சி நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, 'இப்ப இல்லன, எப்பவும் இல்ல' என்று மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, 'மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்' என நம்பிக்கை அளித்துவிட்டு, மொத்தமாக அனைவரையும் ஏமாற்றி விட்டு 'என் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை' என்று சுருக்கமாக கூறிவிட்டு ஒதுங்கிவிட்டார்.
'தமிழ்நாட்டுக்காக உயிரையும் கொடுப்பேன்' என்று கூறியவரின் காரணத்தை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யாரும் யாரையும் எதற்கும் கட்டாயப்படுத்த முடியாது என்றாலும், அவர் கூறிய ஒற்றை சொல்லுக்காக, களமிறங்கி பணிபுரிய தயாராக இருந்த ஏராளமான தொண்டர்கள் மனமுடைந்துதான் போனார்கள். அவரை குறை சொல்லவும் முடியாமல், அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், அவரிடமே மீண்டும் கெஞ்சிப் பார்த்தார்கள். எதற்காகவும் இனி அவர் தன் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார் என புரிந்த பிறகு, சிலர் வேறு கட்சிகளை நோக்கி செல்லத் தொடங்கினர், சிலர் வீடுகளில் முடங்கிப்போயினர்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை அளித்த அடுத்த புள்ளி முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தோழி வி.கே சசிகலா. தேர்தலுக்கு முன்னர், சரியான தருணத்தில் அவர் விடுதலையானதை அமமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது, ஆளும் கட்சி தலைவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது. பல கணிப்புகள், வல கருத்துகள், பல அச்சங்கள், பல ஊகங்கள் என பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்த நிலையில், தான் அரசியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார், சிலருக்கு மகிழ்ச்சியையும் அளித்தார் சசிகலா.
ALSO READ: தமிழகத் தேர்தல் முடிவுகள்: கோட்டையை பிடிப்பது யார்? கோட்டை விடுவது யார்?
ஐந்துமுனைப் போட்டி:
அனைத்து குழப்பங்களும் தெளிந்துபோகவே, இறுதியாக தமிழகத் தேர்தல் ஐந்துமுனைத் தேர்தலானது. அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., ம.நீ.ம ஆகிய கட்சிகள் அவர்களுடைய கூட்டணிக் கட்சிகளுடனும் நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலை எதிர்கொண்டார்கள்.
அதிமுக கூட்டணி:
எதிர்பார்த்தபடியே அதிமுக பாஜக-வுடன் கூட்டணி அமைத்தது. மிகப்பெரும் ஆளுமையான முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இல்லாமல் அதிமுக எதிர்கொண்ட முதல் தேர்தலாகும் இது. பரப்புரைகளில் எந்த குறையும் இல்லாமல், அதிமுக தலைவர்கள் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்தனர். தங்கள் ஆட்சியில் நடந்த மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டனர். இவற்றால், மக்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளதாக மக்கள் நினைக்கிறார்களா? மீண்டும் இக்கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புகிறார்களா? இவை அனைத்தும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தெரிந்துவிடும்.
திமுக கூட்டணி:
காங்கிரஸ் மற்றும் இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்த திமுக (DMK), தேர்தலுக்கான பிரச்சாரத்தை கச்சிதமாக செய்து முடித்தனர். நீட் தேர்வு, தூத்துக்குடி விவகாரம் என அனைத்து வித பிரச்சனைகளையும் மக்களுக்கு நினைவூட்டியது திமுக. திமுக தலைவர் ஸ்டாலின் பல ஊர்களுக்கு சென்று, அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். ஆட்சிக்கு வந்தால் அவற்றுக்கு எவ்வாறு நிவாரணம் அளிப்போம் என்பதையும் விளக்கினார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், திமுக-வின் தேர்தல் உத்தி வெற்றி பெற்றுள்ளது என்றே காட்டுகிறது.
ம.நீ.ம கூட்டணி:
பிரபல நடிகர் கமல்ஹாசன் அதிகம் யோசிக்காமல் அரசியல் களத்தில் குதித்து, அதே வேகத்தில் கட்சியையும் துவக்கினார். கணிசமான ஆதரவையும் பெற்று தெளிவான தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். தன்னை நாடி வந்தவர்கள் அனைவரையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டார். மாற்றத்தைத் தருகிறேன், பொறுப்பைத் தாருங்கள் என கூறி பரப்புரை ஆற்றினார். திரையில் ரசித்த மக்கள் இவரை கோட்டையிலும் வைத்து அழகு பார்க்கத் தயாராக உள்ளார்களா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.
அ.ம.மு.க கூட்டணி:
வி.கே.சசிகலாவின் மருமகன் டி.டி.வி. தினகரன் சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும்வரை சிறிய தயக்கதுடனேயே செயல்பட்டுக்கொண்டிருந்தது தெரிந்தது. எனினும், சசிகலா அரசியலில் இருந்து விலகியவுடன், அமமுக-வின் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கின. அதிமுக-வை மீட்டெடுத்து உண்மையான அம்மா ஆட்சியை அளிப்போம் என்று மக்களுக்கு உறுதி அளித்துள்ள அமமுக-வுக்கு மக்கள் என்ன பதிலளித்துள்ளார்கள் என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.
நாம் தமிழக் கட்சி:
தனித்து நின்று சாதனை படைப்போம் என போட்டியிட்டது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி. முதன் முறையாக 50 சதவிகித தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கி அனைவரையும் இக்கட்சி திரும்பிப் பார்க்க வைத்தது. நமது மண்ணுக்காகவும், மண்ணின் உழவனுக்காகவும், மண்ணின் கலாசாரத்திற்காகவும் போராடும் ஒரே கட்சியாக தன்னைக் காட்டிக்கொண்டுள்ள இக்கட்சி பரப்புரைகளிலும் சிறிது மாறுபட்டே இருந்தது. இந்த மாற்றம் தேவை என மக்கள் எண்ணினார்களா என்பது வாக்கெண்ணிக்கைக்குப் பிறகு தெரியும்.
ஐந்துமுனைப் போட்டி, இருமுனைப் போட்டியானதா?
தமிழகத்தில் தேர்தல் களம் களைகட்டத் துவங்கியபோது, இது ஒரு ஐந்துமுனைப் போட்டியாக இருந்தது. எனினும், வியாழனன்று வந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இது வெறும் இருமுனை போட்டியாக சூருங்கி விட்டதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், திராவிடக் கட்சிகளைத் தாண்டி சிந்திக்க தயாராக உள்ளார்கள் என பல பேச்சுகள் இருந்தன. எனினும், கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றே சுட்டிக்காட்டுகிறது. தேர்தல் முடிவுகள் வந்தால்தான் உண்மை நிலைமை புலப்படும் என்ற போதிலும், முக்கிய போட்டி அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கு இடையில் மட்டும்தான் என்பது கருத்துக்கணிப்பில் (Exit Poll) தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? கோட்டையை பிடிக்கப்போவது எந்த கட்சி? மக்கள் ஆதரவு யாருக்கு? விடை, இன்னும் சில மணி நேரங்களில்!!
ALSO READ: TN Elections 2021: நாளை வாக்கு எண்ணிக்கை; காவல் துறை கூறுவது என்ன
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR