தமிழக அரசு வழங்கும் பெண்களுக்கான இரு சக்கர வாகன திட்டத்திற்கு இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50,000 ரூபாய்க்கு மிகாமல் இருப்பவர்களுக்கு இருசக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் மானியம் அல்லது 25,000 ரூபாய் என தமிழக அரசு அறிவித்தது. திட்டத்தின் கீழ் பலனடைய பெண்கள் பலரும் விண்ணப்பித்து வரும் நிலையில், விண்ணப்பிக்க இன்று கடைசி தினம் என்றும் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் மீது பிப்ரவரி 10-ம் தேதி முதல் களஆய்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. களஆய்வுக்கு பிறகு பிப்ரவரி 15-ம் தேதி மாவட்ட தேர்வுக் குழு பயனாளர்களை தேர்வு செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி, முதற்கட்டமாக மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்றும், 2017-18-ம் நிதியாண்டில் முதற்கட்டமாக ஒரு லட்சம் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.