தமிழர்களை பிரிக்கும் சக்திகள் அதிகமாகி இருக்கின்றன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சாதியால், மதத்தால் தமிழர்களை பிரிக்கும் சக்தி அதிகமாகியிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 4, 2022, 04:24 PM IST
  • ஃபெட்னா மாநாடு நடந்துவருகிறது
  • இதில் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசினார்
தமிழர்களை பிரிக்கும் சக்திகள் அதிகமாகி இருக்கின்றன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் title=

வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையான ‘ஃபெட்னா’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர்,“கீழடி உள்ளிட்ட ஆய்வுகளின் மூலமாக நமது வரலாற்றை மீட்டெடுப்பது, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை நடைமுறைப்படுத்துவது, உலகளாவிய தமிழினத்தை ஒருங்கிணைப்பது, தமிழன் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவன் கண்ணீரைத் துடைப்பது, தமிழகத்தை அனைத்து மேன்மைகளும் அடைந்த நாடாக வளர்த்தெடுப்பது ஆகிய ஐந்து மாபெரும் குறிக்கோள்கள் கொண்ட அரசாக நம்முடைய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. 

நான் மிகக் கவனமாகத்தான் இது நம்முடைய அரசு என்று சொல்கிறேன். எனது அரசு என்றோ, திமுக அரசு என்றோ சொல்லவில்லை. 'இது ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் - ஓர் இனத்தின் அரசாக அமையும்' என்று நான் சொல்லி இருக்கிறேன். சமூகநீதி - சுயமரியாதை - சமத்துவம் - சகோதரத்துவம் - மானுடப்பற்று - தமிழ் மொழிப்பற்று - இன உரிமைகள் - கூட்டாட்சித் தத்துவம் - மாநில சுயாட்சித் தத்துவங்களைக் கொண்ட திராவிட மாடல் அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க | மீனவர்கள் கைது... நிரந்தர தீர்வு காண்க - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

இத்தகைய திராவிடவியல் ஆட்சியியல் கோட்பாட்டை கடந்த 100 ஆண்டுகால திராவிட இயக்கத் தலைவர்கள் முன்னெடுத்த சமூக - பொருளாதார - அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் நான் வடிவமைத்திருக்கிறேன். திராவிடம் என்ற சொல்லைத் திட்டமிட்டுத்தான், நான் குறிப்பிடுகிறேன். திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இனப்பெயராக, இடப்பெயராக, மொழிப்பெயராக இருந்தது. இது ஓர் இயக்கத்தின் பெயராக கடந்த 100 ஆண்டு காலமாக இருக்கிறது. இன்று ஓர் அரசியல் தத்துவத்தின் பெயராக - ஒரு கோட்பாட்டின் பெயராக இருக்கிறது.

 

'எல்லார்க்கும் எல்லாம்' என்ற கோட்பாட்டின் அரசியல் வடிவமாக அது சொல்லப்படுகிறது. இந்தத் தத்துவத்திற்கு எதிரானவர்கள், இந்தக் கோட்பாட்டுக்கு எதிரானவர்கள் - எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கக் கூடாது என்று நினைப்பவர்கள், திராவிட இயக்கத்தையும் எதிர்க்கிறார்கள், இந்த ஆட்சியையும் எதிர்க்கிறார்கள். திராவிடம் என்ற சொல்லையும் எதிர்க்கிறார்கள். இத்தகைய எதிரிகள் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறார்கள். இவர்களை மீறித்தான், இவர்களை எல்லாம் தாண்டித்தான் தமிழினம் வளர்ந்திருக்கிறது! வாழ்ந்துகொண்டு இருக்கிறது! எனவே இவர்களை புறந்தள்ளி நாம் வளர்வோம். வாழ்வோம்.

மத மாய்மாலங்களையும் சாதிச் சழக்குகளையும் வீழ்த்தும் வல்லமை மொழிக்குத்தான் உள்ளது. மதம் என்று நான் சொல்லும்போது, யாருடைய இறைநம்பிக்கையையும் நான் சொல்லவில்லை. இறை நம்பிக்கை என்பது அவரவர் சிந்தனை! விருப்பம்! உரிமை! அதில் ஒருநாளும் தலையிடமாட்டோம். அதே நேரத்தில், தமிழர்களைப் பிளவுபடுத்தும் கருவியாக மதத்தைப் பயன்படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.

மேலும்  படிக்க | வானகரம் பைபாஸ்...நள்ளிரவில் லிப்ட் கேட்ட பெண்...அடுத்தடுத்த ட்விஸ்ட்!

சாதிக்கு அத்தகைய சமாதானத்தைச் சொல்ல முடியாது. சாதி என்பது தமிழினத்தைப் பிளவுபடுத்தும் முதலாவது சக்தியாக இருக்கிறது. அதனால்தான் 'சாதியை ஒழித்தல் ஒன்று, தமிழை வளர்த்தல் மற்றொன்று' என்று பாவேந்தர் பாடினார். அதனால்தான், ‘தமிழால் இணைவோம்’என்பதை நமது முழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

சாதியால், மதத்தால் தமிழர்களைப் பிரிக்கும் சக்திகள் அதிகமாகி வரும் சூழலில் நாம் அனைவரும் ஒன்றுசேர்வதற்கு, நம்மை ஒருங்கிணைக்கும் ஆற்றல் தமிழ்மொழிக்கு மட்டும்தான் இருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் - பல்லாயிரம் மைல் கடந்தும் இன்று நாம் ஒன்றாகக் கூடியிருக்கிறோம் என்றால் - தமிழர் என்ற உணர்வோடு நாம் கூடி இருக்கிறோம்.

நம்மை நாடுகள் பிரிக்கலாம்! நிலங்கள் பிரிக்கலாம்! ஆனாலும், மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ்மொழிக்கு உண்டு. அந்த மொழியை வளர்ப்போம்! தமிழினத்தைக் காப்போம்! உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது நானே வந்து சந்திப்பேன். நீங்களும் அடிக்கடி தமிழகத்திற்கு வாருங்கள் என்ற அன்பான அழைப்புடன் உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்” என்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News