அரசியல் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்..? - EPS தாக்கு..!

உள்ளாட்சி தேர்தலை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பு தான் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

Updated: Nov 12, 2019, 12:36 PM IST
அரசியல் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்..? - EPS தாக்கு..!

உள்ளாட்சி தேர்தலை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பு தான் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அரசியலில் அடிப்படையே தெரியாதவர் கமலஹாசன் எனவும் நாட்டில் எத்தனை உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியாது எனவும் கூறினார். மேலும், வயது மூப்பின் காரணமாக அவரை பாதுகாத்துக்கொள்ள அரசியல் கட்சி தொடங்கியவர் எனவும் மிகப்பெரிய ஆளுமை கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் கூட அரசியலில் கால் ஊன்ற முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் ஹெல்மட் அணிவது முக்கியமானது என தெரிவித்த அவர், காவல்துறையினரின் அறிவுரைகளை ஏற்று பொதுமக்கள் ஹெல்மட்டை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். சாலைகள் மேம்பாட்டிற்காக தமிழகத்தில் 14 சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு தெரிவித்திருந்த போதிலும் முதல் கட்டமாக நான்கு சாலைகளை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் பல்வேறு இடங்களில் பொது மக்களின் எதிர்ப்பு, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சாலை விரிவாக்கம் குறித்து அரசு உரிய முறையில் பரிசீலனை செய்து சாலைகளை மேம்படுத்தி, சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

சென்னையில் காற்று மாசு அதிகம் உள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அரசு அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு காற்று மாசை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். டிடிவி தினகரனின் அமமுக கட்சியிலிருந்து விலகி தமிழகமெங்கும் அதிமுகவில் தொண்டர்கள் இணைந்து வருவதாகவும், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தற்போது அனைத்து கட்சிகளிலும் சேர்வதற்காக பேசி வருகிறார் அவரை எந்த காலகட்டத்திலும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.