ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து வரும் மே 30-ம் தேதி அன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழக மருந்து வணிகர்கள் சங்கள் அறிவித்துள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை அனுமதிக்கக் கோரி ஏராளமான கோரிக்கைகள் மத்திய அரசுக்கு வந்தது.
இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை தற்காலிகமாக ஒரு கமிட்டியை அமைத்து ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வது குறித்து ஆய்வு நடத்தியது. இந்த கமிட்டி தனது ஆய்வறிக்கையை மத்திய சுகாதாரத் துறையிடம் சமர்ப்பித்தது. இதையடுத்து ஆன்லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில செயலாளர் செல்வன் திருச்சியில் செய்தியார்களிடம் கூறியதாவது:
ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ம் தேதி அகில இந்திய அளவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். மே 30ல் மருந்தகங்கள் அனைத்தும் மூடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.