தமிழகத்தில் சட்டவிரோதமாக அமைச்சரவை நீடிக்க மாண்புமிகு பொறுப்பு ஆளுநர் அவர்கள் இடமளித்து விடக்கூடாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
"மெஜாரிட்டியை இழந்துவிட்ட ‘குதிரை பேர’ அரசு நீடிக்க மாண்புமிகு தமிழக பொறுப்பு ஆளுநர் அவர்களும் - சட்டப்பேரவை தலைவர் அவர்களும், ஜனநாயகத்திற்கு விரோதமாக நடந்துகொள்வது அதிர்ச்சியளிக்கிறது. அதிமுகவைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம்”, என்று மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று நேரடியாக, தனித்தனியாக கடிதம் கொடுத்து விட்டார்கள்.
சட்டமன்ற கட்சி தலைவர் கொடுத்த ஆதரவுக் கடிதத்தைப் பரிசீலனை செய்வதற்கு ஆளுநர் அவர்களுக்கு அவகாசம் தேவைப்படலாம். ஆனால் தனித்தனியாக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து “முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம்”, என்று அறிவித்து கடிதம் கொடுத்தப் பிறகு, அதில் ஆளுநர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு அரசின் மெஜாரிட்டியை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, ராஜ்பவனில் அல்ல என்று உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன.
கடந்த பிப்ரவரி 2017ல் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தநேரத்தில் மாற்று அரசை அமைக்க வேண்டிய நேரத்தில், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ராஜ்பவனுக்கே வராமல் ஒரு வாரத்திற்கு மேல் மும்பையிலும், டெல்லியிலும் முகாமிட்டிருந்தார். அதன்பிறகு திரு. ஓ.பன்னீர்செல்வத்தால் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறமுடியாது என்பது இறுதியாக தெரிந்தபிறகு திரு. எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநர் அவர்கள், அன்றே “15 நாட்களுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்”, என உத்தரவிட்டார்.
திரு. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதும், அவர்கள் எதிர்த்து வாக்களித்தால் கூட திரு. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவிழாது என்பதும் வெளிப்படையாகத் தெரிந்த நிலையிலும், அந்த அரசு நீடித்து நிலைக்குமா என்பதைக் கண்டறிய ஆளுநர் அவர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிட்டார். ஆனால் இன்றைக்கு இரு அணிகளும் இணையும் செய்தி வெளியானவுடன் சென்னைக்கு வந்த ஆளுநர் அவர்கள், பதவிப்பிரமாணத்தை செய்து வைத்துவிட்டு, உடனடியாக மும்பை திரும்பி விட்டார். 19 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு வாபஸ் கடிதத்தால் திரு. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்ற நிலையிலும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்படவில்லை.
மாண்புமிகு ஆளுநர் அவர்களின் இந்தத் தாமதத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவைத் தலைவரை வற்புறுத்தி 19 சட்டமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கம் செய்ய நோட்டீஸ் கொடுக்க வைத்துள்ளார்.
பேரவையில் நடைபெறாத நிகழ்வுக்கு, பேரவைத் தலைவர் சார்பில் கட்சித் தாவல் சட்டத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினர், கொறடா உத்தரவை மீறினால் தகுதி நீக்கம் செய்வதற்கான மனுவின் படிவம் மட்டுமே 1986 ஆம் வருட “தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க விதி” யில் இடம்பெற்றிருக்கிறது. இதிலிருந்து, கொறடா உத்தரவை மீறும் போதுதான் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது சட்டமன்ற கட்சித் தாவல் தடுப்புச் சட்ட விதியின் நோக்கமாக இருக்கிறது.
அது மட்டுமல்ல, மாநில ஆளுநருக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளிப்பது கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் வராது என்று ஏற்கனவே உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனாலும், இவற்றையெல்லாம் மதிக்காமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலில், சட்டப் பேரவைத் தலைவர் இப்படியொரு ஜனநாயக விரோத நடவடிக்கையை எடுத்துள்ளார். பேரவைத் தலைவர் நடுநிலையாக செயல்பட வேண்டும் வேண்டும் என்று சமீபத்தில் அருணாசலப் பிரதேச வழக்கில் கூட உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி யிருந்தாலும், எங்கே பேரவைத் தலைவர் அதிமுக சார்பில் முதலமைச்சராகி விடுவாரோ என்ற அச்சத்தில் அவரை வைத்தே இப்படியொரு நோட்டீஸை கொடுக்க வைத்துள்ளார்கள்.
ஒரு ஆட்சிக்கு ஆதரவளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறும்போது, அந்த ஆட்சிக்கு மெஜாரிட்டி இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய ஆளுநர் அவர்கள் உடனடியாக பேரவையைக் கூட்ட வேண்டும் என்று பல தீர்ப்புகளில் உச்சநீதிமன்றமே சுட்டிகாட்டி இருக்கிறது. இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் முதலமைச்சரை நியமிக்கும் அதிகாரத்தை, அரசியல் சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ளது. ஆனால், நடக்கின்ற சட்ட விரோத செயல்கள் எல்லாம் ஜனநாயக படுகொலையாக மட்டுமல்ல, சட்டமன்ற ஜனநாயகத்தையே சிதைக்கும் செயலாக அமைந்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த திரு. ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்காத பேரவைத் தலைவர், இப்போது 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்படுவது, திரு. எடப்பாடி பழனிசாமியின் மைனாரிட்டி அரசை காப்பாற்றுவதற்காகவே என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது போன்ற தருணங்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் அவர்கள் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் குதிரை பேரங்களும், அரசியல் சித்து விளையாட்டுகளும் அரங்கேறவே இடமளித்து விடும். மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு ஆலோசனை சொல்ல, ஒரு சட்டவிரோத அமைச்சரவை தமிழகத்தில் நீடிப்பது அரசியல் சட்டத்திற்கே மிகப்பெரிய சவாலாக அமைந்து விடும். இதையெல்லாம் தடுக்கவே, “மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தர விடுங்கள்”, என்று வேண்டுகோள் விடுத்து மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு 22 ஆம் தேதியே கடிதம் எழுதியிருக்கிறேன்.
ஆகவே, முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமியும், பேரவைத் தலைவர் திரு. தனபால் அவர்களும் கைகோர்த்து, ஜனநாயகப் படுகொலை நடத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்த, சட்டமன்றத்தைக் கூட்டி இந்த அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி, கட்சித் தாவல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி, ஒரு சட்டவிரோத அமைச்சரவை பதவியில் நீடிக்க, பொறுப்புள்ள அரசியல் சட்டப் பதவியில் இருக்கும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இடமளித்து விடக்கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்."
என தெரிவித்துள்ளார்.