ஹரித்துவார்: திருவள்ளுவர் சிலை நிறுவபட்டது தருண் விஜய் தகவல்

Last Updated : Jul 20, 2016, 11:37 AM IST
ஹரித்துவார்: திருவள்ளுவர் சிலை நிறுவபட்டது தருண் விஜய் தகவல் title=

தமிழ் புலவர் திருவள்ளுவரின் புகழை வட இந்தியர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை கரையில் அவரது சிலையை நிறுவ பா.ஜனதா எம்.பி. தருண்விஜய் ஏற்பாடு செய்தார். இதற்காக தமிழகத்தில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை தயாரிக்கப்பட்டு, ஹரித்துவார் கொண்டு செல்லப்பட்டது.

ஹரித்துவாரில் உள்ள டாம் கோதி பகுதியில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பகுதி கும்பமேளா நடக்கும் இடம் என்பதால் அதிகமான கூட்டம் கூடும். எனவே அந்த இடத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து ஹரித்துவாரில் உள்ள சங்கராச்சாரியார் சவுக் என்ற பகுதியில் அந்த சிலையை நிறுவும்படி உத்தரகாண்ட் முதல்-மந்திரி ஹரிஷ் ரவாத் கேட்டுக்கொண்டார். அந்த இடத்தில் உள்ள சாமியார்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவள்ளுவருக்கும் ஹரித்துவாருக்கும் என்ன தொடர்பு? இங்குள்ள மக்களுக்கு அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது. எனவே சங்கராச்சாரியார் சவுக் பகுதியில் திருவள்ளுவர் சிலையை அமைக்க கூடாது. வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள் என்று அவர்கள் கூறினர்.

இப்படி தொடர்ந்து ஒவ்வொரு இடத்திலும் எதிர்ப்பு கிளம்பி வருவதால் எந்த இடத்தில் திருவள்ளுவர் சிலையை அமைப்பது என்ற சிக்கல் எழுந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருவள்ளுவர் சிலை அங்குள்ள ஒரு பூங்காவில் கருப்பு நிற பிளாஸ்டிக் காகிதத்தால் சுற்றி கட்டப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது. இதையடுத்து ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலைக்கு நேர்ந்த அவலம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சிலை அகற்றப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதுபற்றி தருண்விஜய் எம்.பி.யிடம் கேட்டபோது, ‘‘நான் கன்னியாகுமரி முதல் ஹரித்துவார் வரை திருவள்ளுவர் கங்கை பயணம் மேற்கொண்டு வருகிறேன். இந்த பயணம் முடிந்த பிறகு ஹரித்துவாரில் எந்த இடத்தில் சிலையை நிறுவுவது, எப்போது திறப்பு விழா நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார். 

இந்நிலையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு மரியாதை செய்யபட்டதாக தருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

 

Trending News