விவசாய பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக முதல்வர், பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து வரும் வெள்ளிக்கிழமை முதல் அடுத்த 13 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்குக் கரை வாய்க்கால்களிலிருந்து, எள் மற்றும் நிலக்கடலை சாகுபடிக்காக முதல் கட்டமாக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாய பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று 17.11.2017 முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இதைத் தவிர, மேலும் மூன்று கட்டங்களாகவும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதனால், மேட்டூர் அணையின் கிழக்குக் கரை வாய்க்கால் பாசனப் பகுதியில் 27,000 ஏக்கர் நிலங்களும், மேற்குக் கரை வாய்க்கால் பாசனப் பகுதியில் 18,000 ஏக்கர் நிலங்களும், ஆக மொத்தம், 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.