டெங்குக் காய்ச்சல் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி - ராமதாஸ் பாய்ச்சல்

Last Updated : Oct 27, 2017, 10:54 AM IST
டெங்குக் காய்ச்சல் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி - ராமதாஸ் பாய்ச்சல் title=

தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் மற்றும் பிற மர்மக் காய்ச்சல்களை கட்டுப்படுத்துவதிலும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதிலும் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அதைக்குறித்து அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் மற்றும் பிற மர்மக் காய்ச்சல்களை கட்டுப்படுத்துவதிலும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதிலும் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் தோல்வி வெளிப்படையாக தெரிகிறது.

நேற்று ஒரு நாளில் மட்டும் டெங்குக் காய்ச்சலுக்கு குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் டெங்கு உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. டெங்கு மட்டுமின்றி மூளைக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் ஆகியவையும் வேகமாக பரவி வருகின்றன. இவை தவிர பெயர் குறிப்பிடப்படாத மர்மக் காய்ச்சலும் வேகமாக பரவி ஏராளமானோரின் உயிர்களை பலி வாங்கி வருகிறது.

நடப்பாண்டில் கடந்த ஜுன் மாதத் தொடக்கத்தில் டெங்குவின் தாக்கம் தமிழகத்தில் உணரப்பட்டது. அதன்பின் 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் டெங்குக் காய்ச்சலுக்கு இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முந்தைய 4 மாதங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிக உயிரிழப்புகள் கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்டுள்ளன. 

இவ்வளவுக்குப் பிறகும் டெங்குக் காய்ச்சலையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருவது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும். அண்டை மாநிலமான கேரளத்தில் டெங்குவின் தாக்கம் தமிழகத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. ஆனாலும், திட்டமிடப்பட்ட கொசு ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் டெங்குக் காய்ச்சலையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கேரள அரசு முற்றிலுமாக கட்டுப்படுத்தி இருக்கிறது.

ஆனால், தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தோ, டெங்குக் காய்ச்சலுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்தோ இன்று வரை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படவில்லை என்பது தான் உண்மை. 

இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தால் டெங்குக் காய்ச்சலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் முற்றிலுமாக தடுக்கப் பட்டிருக்கும். இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்து விட்ட ஆட்சியாளர்கள், மக்கள் மீது பழி சுமத்தி தப்பிக்க முயல்கின்றனர். தமிழக அரசின் இந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கது.

கொசுக்கள் உற்பத்தியாவதற்கு வசதியாக சுற்றுச்சூழலை மோசமாக பராமரிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. கொசுக்கள் உற்பத்தியாவதைத் தெரிந்தே தடுக்கத் தவறிய நிறுவனங்கள், தனிநபர்கள் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதில் தவறில்லை.

ஆனால், இப்படி ஓர் அறிவிப்பை அரசு வெளியிட்ட நாளில் இருந்து, டெங்குவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு, மக்களுக்கு அபராதம் விதிப்பதையே தங்களின் முதன்மைப் பணியாக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது, வீடுகளில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை கொட்டுவது போன்ற விளம்பரம் தேடும் நடவடிக்கைகளில் தான் அதிகாரிகள் ஈடுபடுகிறார்களே தவிர, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்குவதில்லை. 

தமிழகத்தில் பல இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. அதனால் அந்த நீரை தொட்டிகள்- பாத்திரங்களில் பாதுகாப்பாக சேமித்து வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரை ஆய்வு என்ற பெயரில் கொட்டி வீணடிப்பதை விட பெரிய அபத்தம் எதுவுமிருக்க முடியாது. 

வேலூரில் வீட்டில் சாதாரண உடையில் இருந்த பெண் மருத்துவரின் வீட்டுக்குள் ஆய்வு என்ற பெயரில் பெரும் படையுடன் மாவட்ட ஆட்சியர் நுழைய முயன்றதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மருத்துவரை ஆட்சியர் மிரட்டியதுடன், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப் பதிவு செய்ய வைத்ததும் மக்களிடம் கோபத்தை ஏற்படுத்துமே தவிர ஒத்துழைப்பை உருவாக்காது.

டெங்குவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மக்களை பங்காளிகள் ஆக்குவதன் மூலம் தான் சாதிக்க முடியுமே தவிர, பகையாளிகளாக மாற்றுவதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது. இதை உணர்ந்து மக்களின் ஒத்துழைப்புடன் டெங்குவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News