தமிழகம்: பெரும்பான்மை நிருபிப்பாரா? இபிஎஸ்

Last Updated : Aug 22, 2017, 04:31 PM IST
தமிழகம்: பெரும்பான்மை நிருபிப்பாரா? இபிஎஸ் title=

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக-வில் இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. ஒன்று சசிகலா அணி, மற்றொன்று ஓபிஎஸ் அணி. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். பிறகு தினகரன் தனிமைபடுத்தப்பட்டார்.

தற்போது அதிமுக தினகரன் அணி, ஓபிஎஸ் அணி மற்றும் இபிஎஸ் அணி என மூன்று அணிகளாக பிரிந்தன. தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கினால் நாங்கள் அதிமுகவில் இணைவோம் என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில தினங்களாக பேச்சுவாரத்தை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று அதிமுக தலைமை கழகத்தில் இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி இணைந்தன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். மேலும் மாலை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் ஒ.பன்னீர்செல்வம் தமிழக துணை முதல்வராகவும், ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாஃபோ பாண்டியராஜன் தொல்லியல்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்கள்.

அதிமுக-வில் இருந்து தினகரன் ஒதுக்கி வைக்கப்பட்டதால், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் ஆத்திரமடைந்து முதல்வரை மாற்றுங்கள் என கூறி வருகின்றனர். இதனையடுத்து அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினர்.

கடிதத்தில் கூறியது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம். அவர் பெரும்பான்மையை இழந்து விட்டார். அவரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே உடனடியாக சட்டசபை கூட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின், தேவைபட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவோம் என கூறியுள்ளார்.

தற்போது, அதிமுக 135 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் 116 எம்எல்ஏக்களும், தினகரன் அணியில் 19 எம்எல்ஏக்களும் உள்ளனர். பெரும்பான்மை நிருபிக்க மொத்தம் 117 எம்எல்ஏக்கள் தேவை. எனவே எடப்பாடி பழனிச்சாமி அணி பெரும்பான்மை நிருபிக்க மேலும் ஒரு எம்எல்ஏ தேவைப்படுகிறார். அடுத்து தமிழக அரசியலில் என்ன நடக்கும்? என்று அனைவரும் கவனித்து ‌வருகின்றனர்.

அதேவேளையில், திமுகவிடம் 89 எம்எல்ஏக்களும், காங்கிரஸிடம் 8 எம்எல்ஏக்களும், முஸ்லிம் லீக்கிடம் 1 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

Trending News