Tamil Nadu Political: அம்பேத்கர், காமராஜர், பெரியாரை படியுங்கள் என மாணவர்களுக்கு உரைத்த விஜய் தற்போது பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார். தனக்கு சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம், சரியாக காய்களை நகர்த்தி, தன்னை ஒரு பேசுப்பொருளாக மாற்றி வருகிறார். அவரின் வருகை எந்தெந்த கட்சிகளுக்கு சவால் இருக்கும் என்பதை பார்போம்.
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த பின், விஜய் கலந்து கொள்ளும் கட்சி சாரா முதல் பொது நிகழ்வு இதுவாகும்.
முன்னதாக கட்சிப் பெயரில் திராவிடம் என்ற பெயரை வைக்காமல், தமிழகம் என வைத்திருந்த விஜய்யை நோக்கி பிளா கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் தந்தை பெரியாரை விஜய் கையில் எடுப்பது இது முதன்முறை அல்ல.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு தொகுதிவாரியாக விருதுகளை வழங்கிய நிகழ்சியில் பேசும் போது, "அம்பேத்கர் , பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இது அவரின் அரசியல் பாதையின் நோக்கம் வெளிப்பட்டது.
அதேபோல தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி விஜய் தினது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த பதிவில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்" எனப் பதிவிட்டுருந்தார்.
இப்படி அடுத்தடுத்து தனது அரசியல் பாதையை குறித்து அமைதியாக வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். இந்த நகர்வு திராவிட கட்சிகளுக்கு சற்று ஆச்சரியமும், தமிழ் தேசியம் பேசும் கட்சிகளுக்கு சற்று அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
தந்தை பெரியார் குறித்த விஜய்யின் கருத்துக்களால் அவருடன் கூட்டணி என முதலில் பேசி வந்த நாம் தமிழர் கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்தும் பேசி வந்தார். செய்தியாளர்களை சந்திக்கும் போதெல்லாம் விஜய் எனது 'தம்பி, தம்பி' என புகழ்ந்து பேசி வந்த சீமானுக்கு, விஜய்யின் பெரியார் பாதை அதிர்ச்சியை கொடுத்ததால், நாங்கள் யாருடன் கூட்டணி சேரப்போவதில்லை. எப்பவும் போல தனித்தே போட்டி தான், கூட்டத்தோடு நிற்கிறவனுக்கு துணிவு தேவையில்லை, தனிச்சு நிக்கிறவனுக்கு தான் துணிவு தேவை எனப் பேசினார்.
தமிழ்நாட்டு மண்ணில் பரவிக் கிடக்கும் திராவிட சிந்தனைகளுக்கு மற்றொரு திரியை விஜய் இயற்றுகிறார் இனி திமுக அதிமுக ஆகிய கட்சிகளின் நகர்வுகள் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது மற்றொருபுறம்
பாரதிய ஜனதாவின் பி டீம் என்ற விஜய் குறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஜய்யின் தந்தை பெரியார் குறித்த பேச்சுக்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பாதை என்ன என்பதை காட்டியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவிதம் தஞ்சம் அடைந்தவர்கள், வரும் காலங்களில் விஜய்யை நோக்கி வருவார்கள் எனவும் பார்க்கப்படுகிறது.
திராவிடக் கொள்கைகளை தாங்கி தான் அரசியல் செய்ய முடியும் என்ற எதார்த்தத்தை புரிந்துக்கொண்டு, தமிழ்நாட்டு மண்ணில் பரவிக் கிடக்கும் திராவிட சிந்தனைகளை தவிர்க்காமல், தனது கட்சிக்கு என்ன தேவையோ.. அதை சரியாக எடுத்துக்கொண்டு, அரசியல் ஆட்டத்தை விஜய் ஆரம்பித்துள்ளார். இதனால் இனி திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் நகர்வுகள் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறுபுறம் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் பெரியாரை கையில் எடுத்துள்ள விஜய், அண்ணாவைப் பற்றி இதுவரை பேசவில்லை. கட்சியின் பெயரில் திராவிடம் இல்லை, ஆனால் கழகம் இருக்கிறது. தமிழக அரசியலில் மவுனமாக காய்களை நகர்த்தி வருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ