வேலூர்: காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு,மதியம் 3 மணி வரை 55.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிக அளவில் பணம் விநியோகம் செய்யப்படுகிறது என்றும், அதற்க்காக பல இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது என்றும் தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது. இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிகாரிகள் கட்டுகட்டாக பணம் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து வேலுார் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 38 மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 37 தொகுதியில் திமுக கூட்டணியும், ஒரு இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றனர்.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை 18 ஆம் தேதி நிறைவடைந்தது. வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் உட்பட சுயேச்சைகள் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதனையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வேலூர் மக்களவைத் தேர்தலில் 18 சுயேச்சைகள் உள்ளிட்ட 28 பேர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி வேலூர் தொகுதி மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. இதனையடுத்து, வேலூர் மக்களவைத் தொகுதியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று வாக்குப்பதிவு துவங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு 6 மணிக்கு நிறைவடைகிறது. தற்போது கிடைத்த தகவலின் படி, பிற்பகல் 3 மணி வரை 55.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவுக்காக 1,553 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. 7,500 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். 3,752 வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,876 கன்ட்ரோல் யூனிட்டுகளும், 1,876 விவிபேட் எந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. வேலூர் தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 7,06,351 பேரும், பெண்கள் வாக்காளர்கள் 7,31,099 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 105 பேரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.