விஜய் படம் என்றாலே சர்ச்சை தான்!! பிகில் இசை விழாவுக்கு எதன் அடிப்படையில் அனுமதி?

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Sep 24, 2019, 12:36 PM IST
விஜய் படம் என்றாலே சர்ச்சை தான்!! பிகில் இசை விழாவுக்கு எதன் அடிப்படையில் அனுமதி?

சென்னை: பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது ஆளும் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. அதாவது ஆளும் கட்சியினர் வைத்த பேனர் காரணமாக சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியானார். இதை மேற்கோள் காட்டி பேசிய விஜய், "யார் மீது பழி கூற வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு லாரி டிரைவர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகின்றனர். யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவர்களை அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் எனக் கூறியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆளும் கட்சி அமைச்சர்கள் விஜய்க்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 

கடந்த வாரம் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. அந்த விழாவில் படத்தில் நடித்த நயன்தாராவை தவிர மற்ற அனைவரும் பங்கேற்றனர். அந்த விழா தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழா மைதானம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் கலந்துக்கொண்டனர். 

அந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், வாழ்க்கையும் ஒரு கால்பந்து போட்டி தான். நாம் கோல் போடுறதையும் தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். நம் கூட இருப்பவர்களே சேம்சைடு கோல் போடுவார்கள். யாருடையும் அடையாளத்தை எடுத்துக்கொள்ளாதீர். உழைத்தவர்களை மேடை ஏற்றி அழகு பார்க்கும் முதலாளி, ரசிகர்கள் தான். எதிரியாக இருந்தாலும் அவரை மதிக்க வேண்டும். அரசியலில் புகுந்து விளையாடுங்கள். ஆனால் விளையாட்டில் அரசியலை கொண்டு வராதீர்கள்.

பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு எனது ஆறுதல். யார் மீது பழி கூற வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு லாரி டிரைவர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகின்றனர். யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவர்களை அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் என அதிரடியாக பேசியிருந்தார். 

விஜய்-யின் இந்த பேச்சு ஆளும் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. எங்களை தான் விஜய் தாக்கி பேசுகிறார் என நினைத்து சில அமைச்சர்கள் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "பிகில்" ஆகும். இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் மற்றும் சிங்கப் பெண்ணே மற்றும் வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சக்க போட்டு போட்டது.