சென்னை: திமுகவின் ஆட்டம் இனிமேதான் ஆரம்பம். பொறுத்திருந்து பாருங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கபட்டது.
38 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக 37 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. அதேபோல சட்டமன்ற இடைதேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
தி.மு.க சார்பில் போட்டியிட்ட வெற்றி பெற்ற 13 வேட்பாளர்கள் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், ஓசூர், திருவாரூர், தஞ்சாவூர், ஆண்டிபட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 13 தொகுதிகள் ஆகும். இதில் திருப்பரங்குன்றம் தவிர மற்ற அனைத்து தொகுதிகளும் அ.தி.மு.க கைவசம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சட்டப்பேரவையில் திமுக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 110 ஆக உள்ளது. அதில் திமுக மட்டும் 101 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ளது. அதேபோல அதிமுகவிடம் 123 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மை நிருப்பிக்க மொத்தம் 118 எம்.எல்.ஏக்கள் தேவை ஆகும்.
இன்று வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்களும் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றனர். அவர்களுடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார்.
இதனையடுத்து சென்னை தலைமைச் செயலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "சட்டமன்றம் கூட்டம் கூடும்போது திமுக எப்படி செயல்பட போகிறோம் என்பதை நீங்கள் அனைவரும் நேரடியாக பார்க்க போகிறீர்கள்.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா என்பது சட்டமன்ற கூட்டம் அறிவித்த பின்பு அதுகுறித்து நாங்கள் முடிவெடுப்போம். பொறுத்திருந்து பாருங்கள் இனிமே திமுகவின் அதிரடி தொடரும் எனக் கூறினார்.