வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி(Minister Ponmudi) மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் தண்டித்துள்ளது. திமுகவின் முக்கிய முகமாக இருந்த அவருக்கு இந்த வழக்கின் மூலம் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கும் அவர், பதவியில் இருக்கும்போதே தண்டிக்கப்பட்டுள்ளார். திமுகவில் அமைச்சர் பதவியில் இருகும்போது தண்டிக்கப்படும் முதல் நபர் பொன்முடி ஆகும்.
பொன்முடி யார்?
இவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர். 1989 ஆம் ஆண்டு முதல் அரசியலில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். பகுதி நேர பேராசிரியராக இருந்த பொன்முடி, திமுக சார்பில் விழுப்புரம் தொகுதியில் 1989 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற மற்றொரு சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அப்போது மாநிலத்தில் அதிமுக ஆட்சியை பிடித்து முதன்முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன்பிறகு 1996, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பொன்முடி அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். அத்துடன் திமுகவின் முக்கிய முகமாகவும் மாறினார்.
மேலும் படிக்க | கருவில் இருந்தே துரத்திய பகை..! 19 ஆண்டுகள் கழித்து பழிதீர்த்த மகன்!
சொத்து குவிப்பு வழக்கு
பொன்முடியின் மகன் கவுதச சிகாமணி தற்போதைய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். திமுகவின் கூட்டணிப் பேச்சுவார்த்தை, கட்சியின் முக்கிய முடிவுகளில் பங்காற்றிய பொன்முடி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நில அபகரிப்பு வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் செம்மண் குவாரி வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. அவற்றில் சொத்து குவிப்பு வழக்கில் தான் இப்போது தண்டிக்கப்பட்டுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தால் விடுக்கப்பட்டிருந்தார்.
பொன்முடிக்கு தண்டனை
இதனை எதிர்த்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என தீர்ப்பளித்தது. இதனால் அவர் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழக்க நேரிட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் திமுக அமைச்சர் ஒருவர் தண்டிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
திமுகவுக்கும் நெருக்கடி
பொன்முடி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கும் சூழலில் அவர் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பொறுப்பை இழக்க நேரிட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு மாற்றாக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் செய்ய வேண்டும். பொன்முடி வகித்த பொறுப்புகளை கூடுதலாக வேறு ஒரு அமைச்சருக்கு ஒதுக்கலாம் அல்லது புதிதாக ஒருவரை அந்த துறைக்கு அமைச்சராக நியமிக்கலாம். அத்துடன் அரசியல் களத்திலும் திமுகவுக்கு நெருக்கடி தான். விழுப்புரம் தொகுதி மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் இந்த விகாரத்தை முக்கிய பிரச்சாரமாக மாற்றுவார்கள். அதனை எப்படி திமுக எதிர்கொள்ளும் என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மேலும் படிக்க | திமுகவை டார்கெட் செய்து கொங்கு மண்டலத்தில் பரப்பப்படும் வதந்திகள், வீடியோக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ