25-வது நாள் வேலை நிறுத்தத்திற்கு பின் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் இன்று முதல் அனைத்து பட்டாசு ஆலைகளும் பட்டாசு உற்பத்தியைத் தொடங்க உள்ளன.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு வெடிக்க இந்தியா முழுவதும் தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதனால் விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து பட்டாசு உற்பத்தியாளர்கள் கடந்த 25- நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சுற்று சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து முற்றிலும் விலக்க அளிக்க கோரியும், பட்டாசு தொழிலையும், பட்டாசு தொழிலாளர்களையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதனால் 4 லட்சத்துக்கு அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வருவாய் இல்லாமல் அவதிப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.அன்றாட செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் சிரமப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி பட்டாசு உற்பத்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சுற்றுசூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தும் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்ததை அடுத்து அடுத்து விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
இதனால் இன்று முதல் அனைத்து பட்டாசு ஆலைகளும் வழக்கம்போல உற்பத்தியைத் தொடங்க உள்ளன.