கடந்த 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100_வது நாளாக தொடர் போரட்டம் 144 தடை உத்தரவை மீறி நடைபெற்றது. இதனால் போலீசாரும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் சுமார் 13 பேர் சூட்டு கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நேற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தமிழக அரசு அரசாரணை பிறப்பித்தது. இன்று துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு கொலைச் சம்பவம். துப்பாக்கி சூடு நடத்துவதற்கான அடிப்படை விதிகள் எதுவும் கடைபிடிக்க வில்லை எனக் கூறி வழக்கறிஞர் ராஜராஜன் வழக்கு தொடுத்தார். இதனையடுத்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் 4 அதிகாரிகள் தூத்துக்குடி வருகை தந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக நேரடியாக விசாரணை நடத்தி 2 வாரத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.