India Vs Canada: இந்தியாவின் எச்சரிக்கையை அடுத்து 41 தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்ற கனடா

Canada Withdraws Diplomats From India: காலிஸ்தான் பயங்கரவாதியின் கொலை தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து 41 தூதர்களை கனடா திரும்பப் பெற்றுள்ளது,

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 20, 2023, 12:32 PM IST
  • கடந்த ஜூன் மாதம் சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை
  • இந்தியாவில் பணியாற்றிய 41 பேரை திரும்ப கனடா அழைத்துக் கொண்டது.
  • கனடா "தீவிரவாதம், இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு" தளமாக இருக்கிறது.
India Vs Canada: இந்தியாவின் எச்சரிக்கையை அடுத்து 41 தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்ற கனடா title=

Canada News: கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி கனடா வான்கூவரில் ஒரு சீக்கிய பிரிவினைவாதி தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்ட சம்பத்தின் தொடர்ச்சியாக இந்தியாவில் இருந்து 41 கனடிய தூதர்கள் வெளியேறுகின்றனர் என கடனா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து தூதரக அதிகாரிகள் வெளியேறுவதற்கு கனடா கவலை தெரிவித்திருக்கிறது.

கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி பேசியது, 

இந்த விவகாரம் குறித்து பேசிய கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி (Melanie Joly) புதன்கிழமையன்று, "இந்திய அரசாங்கம் தங்கள் நாட்டின் 41 பேர் தூதரக அதிகாரிகளின் அந்தஸ்து பறிக்கப்படும் எனக் கூறியதை அடுத்து, கனடா அரசாங்கம் தனது தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதற்கான இந்தியாவின் அச்சுறுத்தல் "கவலையை அளிக்கிறது" மற்றும் "சர்வதேச சட்டத்தை மீறுவதாக" உள்ளது என்றும், இந்தியாவின் நடவடிக்கையால் இரு நாடுகளின் தூதரக சேவையை பாதிக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

கனடா தொடர்ந்து சர்வதேச சட்டத்தை மதிக்கும் மற்றும் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு கனடா பதிலடி கொடுக்காது என்றும் ஜோலி கூறினார்.

தூதரக அதிகாரிகளின் விதிமுறைகளை மீற நாம் அனுமதித்தால், உலகத்தில் எங்கும் எந்த தூதரக அதிகாரிகளும் பாதுகாப்பாக இருக்க முடியாது. எனவே இந்த காரணத்திற்காக, நாங்கள் பதிலடி கொடுக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க - பயங்கரவாதிகளுக்கு 'பாதுகாப்பான புகலிடமாக' கனடா மாறி வருகிறது: இந்தியா

"எங்கள் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் இந்தியாவின் நடவடிக்கைகளின் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, அவர்கள் இந்தியாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு நாங்கள் வசதி செய்துள்ளோம்" என்று ஜோலி செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

இதன்மூலம் இந்தியாவில் பணியாற்றி வந்த 62 கனடா தூதர்களில், 41 பேரை திரும்ப அழைத்துக் கொண்டதால், தற்போது 21 கனடா தூதர்கள் இந்தியாவில் இருப்பார்கள்.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சு முன்னர் கனடாவில் உள்ள கனேடிய தூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அழைப்பு விடுத்தது, அவர்கள் கனடாவில் உள்ள இந்தியாவின் பணியாளர்களை விட அதிகமாக இருப்பதாகக் கூறினர்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை

இந்தியாவில் சுதந்திர சீக்கிய அரசை (தனி நாடு அந்தஸ்து) உருவாக்க வேண்டும் என செயல்பட்டு வரும் காலிஸ்தான் இயக்கத்தின் முக்கிய உறுப்பினரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் குற்றம் சாட்டியதில் இருந்து ஒட்டாவா மற்றும் புது தில்லி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை

இந்தியாவில் பயங்கரவாதக் குற்றங்கள் மற்றும் குண்டு வெடிப்பு, கொலை சதி செயல்களில் ஈடுபட்ட இந்திய அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த கனடா குடிமகன் நிஜ்ஜாரை சுட்டுக் கொன்றதில் எந்தத் தொடர்பும் இல்லை என்று புது தில்லி மறுத்துள்ளது. அதேநேரத்தில் கனடா "தீவிரவாதம் மற்றும் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு" ஒரு தளமாக இருப்பதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டினர். மேலும் இந்த பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை கனடா அரசு எடுக்க வேண்டும் என்று இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

மேலும் படிக்க - இந்தியாவை கனடா குற்றம்சாட்ட இதுதான் காரணம்: அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியா - கனடா மோதலுக்கு காரணம் என்ன?

பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு பின்னால் இந்தியாவின் நடவடிக்கைகள் இருப்பதற்கான காரணம் இருக்கின்றன என்று கனடா குற்றம்சாட்டியது. ஆனால் அவரின் கொலைக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் இல்லை என இந்தியா அரசு தொடர்ந்து கூறி வந்தது. இதனால் கோவத்தின் உச்சிக்கு சென்ற கனடா அரசு, இந்திய நாட்டின் தூதரக அதிகாரி ஒருவரை கனடா நாட்டில் இருந்து வெளியேற்றி உத்தரவிட்டது. இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய அரசும் கனடா நாட்டு தூதரக அதிகாரி வெளியேற உத்தரவிட்டது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவு கடுமையாக பாதித்தது. மேலும் விசா சேவை இடைநிறுத்துதல், தொடர் தூதரக அதிகாரி வெளியேற்றும் நடவடிக்கைகள் காரணமாக இந்தியா - கனடா உறவில் விரிசல் விழுந்தது.  

யார் இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?

1990-களின் நடுப்பகுதியில் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்த பின்னர் 2015 இல் கனடா குடியுரிமை பெற்ற நிஜ்ஜார், ஜூன் மாதம் சர்ரேயின் வான்கூவர் புறநகரில் உள்ள சீக்கிய கோவிலுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

கனடாவில் வசிக்கும் 2 மில்லியன் இந்திய வம்சாவளியினர்

சுமார் 770,000 சீக்கியர்கள் உட்பட சுமார் 2 மில்லியன் கனடியர்கள் இந்திய பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். கடந்த மாதம், நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கனடாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களுக்கு வெளியே அணிவகுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கொடிகளை எரித்தும், மிதித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலிஸ்தான் இயக்கம்

காலிஸ்தான் இயக்கம் இந்தியாவில் அதன் அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழந்திருந்தாலும், சீக்கிய புலம்பெயர்ந்தோர் மத்தியில் அது தொடர்ந்து குறிப்பிடத்தக்க ஆதரவைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - இந்தியா கனடா மோதல்: அடிவாங்கும் பொருளாதாரம், கண்டுகொள்ளாத அமெரிக்கா.... குழம்பும் கனடா!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News