எப்பிஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமேவை பதவி நீக்கம் செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சியன் ஸ்பைசர் கூறுகையில்:- எப்பிஐ இயக்குனர் பதவியிலிருந்து ஜேம்ஸ் கோமேவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற அட்டர்னி ஜெனரல் மற்றும் துணை அட்டர்னி ஜெனரல்களின் கோரிக்கையை அதிபர் ஏற்று கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.
பதவி நீக்கம் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஹிலாரி இமெயில் விவகாரம் தொடர்பாக விசாரணையை கோமே வெளிப்படையாக விவாதித்தது மற்றும் நீதித்துறை கொள்கைகளை அவர் மீறிவிட்டதாக அத்துறை அதிகாரிகள் கருதியதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். ஹிலாரி விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் ஜேம்ஸ் கோமேவை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட்டனரா என கோமே விசாரணை நடத்தி வந்தார்.
கடந்த வருடம் ஜூலை மாதம் துவங்கிய இந்த விசாரணை தற்போது அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அவரது பதவி நீக்கம் விசாரணையை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.