2019-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியன் பிரதமர் அபி அகமதுவுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிரி நாடான எரித்திரியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்துவதன் மூலம் உலகளாவிய அமைதி மற்றும் ஒத்துழைப்பில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக பிரதமர் அபி அஹ்மத் அலியின் பெயர் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2018-ல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு, அபி அகமது எத்தியோப்பியாவில் ஒரு பெரிய அளவிலான தாராளமயமாக்கலைத் தொடங்கினார்.
அபி அகமது ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களை சிறையிலிருந்து விடுவித்து நாடுகடத்தப்பட்ட அதிருப்தியாளர்களை நாட்டிற்கு திரும்ப செல்ல அனுமதித்தார். மிக முக்கியமாக, அவர் எரித்திரியாவுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இருப்பினும், அபி அகமதுவின் சீர்திருத்தங்கள் எத்தியோப்பியாவின் இனப் பதட்டங்களை அம்பலப்படுத்தியது, வெடித்த வன்முறையில் 2.5 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தூண்டியது.
மதிப்புமிக்க அமைதிக்கான நோபல் பரிசுக்கான பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் 16 வயதான சுவீடன் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உட்பட பல பெயர்கள் குறித்து மிகப்பெரிய விவாதம் நடைபெற்றது. இது தவிர, ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் ஹாங்காங்கில் உள்ள ஆர்வலர்கள் ஆகியோரின் பெயரும் இந்த பந்தயத்தில் சேர்க்கப்பட்டு இருந்தது. இருப்பினும் இறுதியில் எத்தியோப்பியன் பிரதமர் அபி அகமது அமைதிக்கான நோபல் பரிசினை வென்றார்.