பிலிப்பைன்ஸ் நாட்டின் மரவி நகரத்தில், பிலிப்பைன்ஸ் விமானப்படை வீசிய குண்டு தவறுதலாக சொந்த நாட்டு படைகள் மீது விழுந்ததில் 11 வீரர்கள் பலியாகி உள்ளனர்.
மாராவி தீவின் தெற்குப் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அதனை மீட்க, பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவ வீரர்களுக்கும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்துவருகிறது.
இன்று காலை தீவிரவாதிகள் தங்கி இருக்கும் பகுதியைக் குறிவைத்து, ராணுவத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் தவறுதலாக அருகில் இருந்த ராணுவ முகாம் மீது விழுந்தது. இதனால், 11 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும், 7 வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம்குறித்து பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், மரவியின் தெற்குப் பகுதி, தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது. சுமார் 2,000 பேர் அங்கு சிக்கியுள்ளனர். அந்தப் பகுதியைத் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க தொடர்ந்து வான்வழியாகவும் நில வழியாகவும் தாக்குதல் நடத்திவருகிறோம். அவ்வாறு தாக்குதல் நடத்தும்போது, சில சமயங்களில் ஒருங்கிணைப்பு இல்லாமல் தவறு நிகழ்வது சகஜம். அப்படித்தான் இன்று வான்வழித் தாக்குதலில் குறி தவறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு அங்குள்ள மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.