சிறை பிடிக்கப்பட்ட பிரிட்டிஷ் எண்ணெய் கப்பலில் பணியாற்றிய 18 இந்திய மாலுமிகளும் பத்திரமாக இருப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதன் காரணமாக அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
இதனிடையே வளைகுடா கடல் பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் ராணுவம் அண்மையில் சுட்டு வீழ்த்தியது. இதற்குப் பதிலடியாக சில நாட் களுக்கு முன்பு ஈரானின் ஆளில்லா உளவு விமானத்தை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த எண்ணெய் கப்பல் ‘ஸ்டெனா இம்பெரோ' 23 ஊழியர்களுடன் கடந்த 19-ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலை ஈரான் அரசின் புரட்சிகர படை வீரர்கள் சிறை பிடித்தனர். ஈரானின் மீன்பிடி படகு மீது மோதியதால் பிரிட்டிஷ் கப்பல் சிறைபிடிக்கப்பட்டதாக அந்த நாட்டு அரசு தெரிவித்தது.
கப்பலில் பணியாற்றும் 23 ஊழியர்களில் 18 பேர் இந்தியர்கள். கப்பலின் கேப்டன் கேரளாவை சேர்ந்தவர். இதர ஊழியர்கள் லாட்வியா, பிலிப்பைன்ஸ், ரஷ்யாவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பல் ஊழியர்கள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் நேற்று கூறியபோது, 18 இந்தியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களும் பத்திரமாக, நலமாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. ஈரானில் இருந்து 18 இந்தியர்களையும் மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.