உலகிலேயே முதல் முறையாக சிறுநீரை பரிசோதித்து புற்றுநோயை கண்டறியும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது ஜப்பான். இந்த புதிய முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஒருவருக்கு புற்று நோய் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள இரத்த பரிசோதனை மூலம் கண்டறிவது வழக்கம். இதற்கு மாற்றாக, மார்பக அல்லது பெருங்குடல் புற்றுநோய் தாக்கத்தை சிறுநீர் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளும் சோதனையை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கியது ஜப்பான்.
ஜப்பானில் உள்ள ஹிட்டாச்சி நிறுவனம் உருவாக்கிய பிரத்யேக ஆய்வகத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுவினரால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாண்டு சோதனையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து, 250 சிறுநீர் மாதிரிகளை வைத்து புற்றுநோய் தாக்கத்தை கண்டறியும் முறை தற்போது சோதிக்கப்படவுள்ளது.
இச்சோதனையின் மூலமாக புற்றுநோய் தாக்கத்திற்குள்ளான குழந்தைகளையும் கண்டறிய முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள இந்த சோதனை, வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கவுள்ளது.
இதற்கு, மத்திய ஜப்பானில் அமைந்துள்ள நகோயா பல்கலைக்கழகம் உதவி செய்யவுள்ளது. ஒருவேளை, இம்முயற்சி வெற்றி அடைந்துவிட்டால், வரும் 2020ஆம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் இந்த நவீன முறை அமலுக்கு கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.