வடகொரியா நிகழ்த்திய ஏவுகணை சோதனை தோல்வியை சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய பாதுகாப்புப் பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது. வடகொரியாவின் கிழக்குக் கடலோரத்தில் உள்ள சின்போ நகரில் இருந்து இந்த ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டதாகவும், அடுத்த சில நிமிடங்களிலேயே ஏவுகணை வானில் வெடித்துச் சிதறியதாகவும் அமெரிக்காவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகொரிய நிறுவனர் கிம் ஜாங் சன்னின், 105வது பிறந்த நாள் விழா, வெகு விமரிசையாக அந்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, போர்த்தளவாடங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் பங்கேற்ற பிரமாண்ட அணிவகுப்பு ஒன்றை நடத்திய வடகொரியா, அமெரிகக் மீது போர் தொடுக்க தயார்நிலையில் உள்ளதாகவும், அமெரிக்கா போர் தொடுத்தால் தகுந்த பதிலடி கொடுப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், அதன் ஏவுகணை சோதனை தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து, புதியதாக ஏதேனும் ஒரு ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்த வாய்ப்புள்ளதால், கொரிய தீபகற்பத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.