சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தங்கள் கணவர், தந்தை அல்லது வேறு ஆண் உறவினர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. இந்த விதிமுறைக்கு சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது அந்த விதியை சவுதி அரேபிய அரசாங்கம் நீக்கியுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின் படி 21 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் விண்ணப்பம் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தங்கள் குடும்பத்து ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம்செய்யலாம் எனவும் அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக சவுதியில் வயது வந்த பெண்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு ஆண் உறவினரின் அனுமதியைப் பெறாமல் பாஸ்போர்ட், வெளிநாடு பயணம் மற்றும் வேலை பெற அனுமதி பெறுவது இயலாத ஒன்று ஆகும். பெண்களின் மீதான இந்த அடக்குமுறைக்கு நீண்ட காலமாக எதிர்புகள் நிலவி வந்தது.
இந்த நிலையினை தற்போது சவுதி அரசு மாற்றியமைத்துள்ளது. உலகின் மிகவும் கட்டுப்பாடான ராஜ்யத்தின் உருவத்தை அசைக்க இளவரசர் முகமது பின் சல்மான் தொடர்ச்சியான சில நடவடிக்கைகளில் சமீப காலமாக நிகழ்த்தி வருகின்றார். அந்த வரிசையில் தற்போது தனி பெண்கள் பயணத்திற்கான அனுமதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.