மின்னஞ்சல் முகவரி இல்லாத நிலையில் இணையதளத்தின் மூலமாக மாணவர் சேர்க்கை என்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் கூறியுள்ளார் தக் கூடியதாகும்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
இந்தியாவிலேயே கல்வியில் முன்னோடி மாநிலமாக நீண்டகாலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் 526 பொறியியல் கல்லூரிகளில் ஏறத்தாழ 3 லட்சம் இடங்கள் உள்ளன. சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. குறிப்பாக 140 பொறியியல் கல்லூரிகளில் 30 சதவீதத்திற்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் நடைமுறையில் இருக்கும் வழக்கத்திற்கு மாறாக நடப்பாண்டில் பொறியியல் கலந்தாய்வு சேர்க்கை இணைய தளத்தின் மூலமாகத் தான் விண்ணப்பம் பதிவு செய்தல், பணம் செலுத்துதல், இடஒதுக்கீடு செய்தல், ஆணை பெறுதல் ஆகிய அனைத்தும் நடைபெற வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் உள்ள குறிப்பாக கிராமப்புற மாணவர்களிடையே மிகப்பெரிய
பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பல வருடங்களாக சென்னை அண்ணா பல்கலைக் கழகம் மூலமாக விண்ணப்ப படிவம் பெற்றும், கலந்தாய்வில் கலந்து கொண்டு, தனக்கு பிடித்த கல்லூரிகளில், தங்களின் மதிப்பெண்களுக்கு ஏற்றாற் போல் சேருகிற நடைமுறை இருந்து வந்தது. இது மாணவ - மாணவியரின் பங்களிப்போடு, பெற்றோர்களின் ஈடுபாடும் அதிகளவில் இருந்தது. தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவ - மாணவியர்களும், கிராமப்புற மாணவ - மாணவியர்களும் தங்கள் குடும்பத்தில் பட்டதாரி யாருமே இல்லாத நிலையிலும் உள்ளவர்களால் இணைய தளத்தின் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதோ, அதை பூர்த்தி செய்வதோ நடைமுறையில் சாத்தியமா ? என்பதை ஆட்சியாளர்கள் கடுகளவும் கருதிப் பார்த்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலான மாணவ - மாணவியர்களுக்கு மின்னஞ்சல் முகவரி இல்லாத நிலையில் இணையதளத்தின் மூலமாக மாணவர் சேர்க்கை என்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். ஏற்கனவே தமிழகத்தில் நீட் தேர்வுக்காக ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு
மையங்கள் கிடைக்காமல் போனதற்கு இணையதள விண்ணப்பம் தான் காரணம் என்பதை தமிழக ஆட்சியாளர்களுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். தமிழகத்தில் காவலர் தேர்வுக்கு ஏழு லட்சம் மாணவர்கள் எழுதுவதற்கு தேர்வு மையங்களை அமைத்த தமிழக அரசு நீட் மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் அமைக்க மத்திய இடைநிலை கல்வி வாரியத்தோடு ஏன் ஒருங்கிணைப்பை நடத்தவில்லை ? அத்தகைய ஒருங்கிணைப்பை நடத்தியிருந்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டமாணவர்கள் தங்கள் குடும்பத்தோடு வேறு மாநிலங்களில் தேர்வு எழுத அலைந்து திரிய வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்காது.
இதனால் ஏற்பட்டமன உளைச்சலால் இதுவரை இரண்டு உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இதற்கெல்லாம் மத்திய - மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, நீட் தேர்வு மையங்கள் தேர்வு செய்வதில் எந்த இணைய தளத்தின் மூலமாக பாதிப்புகள் ஏற்பட்டதோ, அதே இணையதளத்தின் மூலமாக தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை செய்ய வேண்டுமென்று தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அல்லது இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் சேர்க்கை நடக்கிற அதேநேரத்தில் நேரிடையாகவும் விண்ணப்பங்களை பெற்று கலந்தாய்வு நடத்துகிற வகையில் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.