புதியதாக 6 மருத்துவ கல்லூரிகள்; மத்திய அரசு சிபாரிசு!

கர்நாடகாவில் புதியதாக 6 மருத்துவ கல்லூரிகள் துவங்க மத்திய அரசு சிபாரிசு  செய்துள்ளது!

Last Updated : Sep 8, 2019, 07:36 AM IST
புதியதாக 6 மருத்துவ கல்லூரிகள்; மத்திய அரசு சிபாரிசு! title=

கர்நாடகாவில் புதியதாக 6 மருத்துவ கல்லூரிகள் துவங்க மத்திய அரசு சிபாரிசு  செய்துள்ளது!

சிக்கமகளூரு, சிக்கபள்ளாபுரா, சித்ரதுர்கா, ஹாவேரி, யாதகிரி மற்றும் பாகல்கோட்டை ஆகிய 6  மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் துவங்க அனுமதி அளிக்கும்படி மாநில அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை  வைக்கப்பட்டது. மாநில அரசின் கோரிக்கையை பரிசீலனை செய்துள்ள மத்திய அரசு, கர்நாடகாவில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க  அனுமதி வழங்கும்படி அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின்  உத்தரவின் பேரில் அனுமதி வழங்கியுள்ள மருத்துவ  கவுன்சில் வரும் கல்வியாண்டு முதல் புதிய கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்துள்ளது. புதியதாக தொடங்கவுள்ள ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா ₹900 கோடி செலவில் கட்டிடம் உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். மொத்த செலவில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40  சதவீதமும் செலவு செய்கிறது. அதன்படி ஒரு கல்லூரிக்கு மத்திய அரசு ₹540 கோடியும், மாநில அரசு ₹360 கோடியும் ஒதுக்கீடு செய்கிறது.

புதிய  மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான நிலம், மின்சாரம், குடிநீர் உள்பட  உள்கட்டமைப்பு வசதிகள் மாநில அரசின் சார்பில் செய்து கொடுக்கப்படும். மேலும் ஒவ்வொரு கல்லூரியிலும் 150 சீட்கள் என 6 புதிய கல்லூரிகளில் கூடுதலாக 900 சீட்கள் வரும் கல்வியாண்டு முதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய  மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி கிடைத்துள்ளதை தொடர்ந்து மருத்துவ கல்வி அமைச்சர் பி.ராமுலு மற்றும் அத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள முதல்வர் எடியூரப்பா, 6  மாவட்டங்களிலும் கல்லூரிகள்  தொடங்க தேவையான நிலம், மாவட்ட நிர்வாகம் மூலம் தேர்வு செய்யும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா 50 ஏக்கர் நிலம் தேவைப்படும்  என்று எதிர்பார்ப்பதால், முடிந்த வரை அரசுக்கு  சொந்தமான நிலத்தை தேர்வு  செய்யும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் ஆலோசனை அளித்துள்ளார்.

இதனிடையில் நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கவும், வரும் 2020-21ல் மேலும் 75 மருத்துவகல்லூரிகள் தொடங்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதிலும் சில கல்லூரிகளை கேட்டு பெற  கர்நாடக  முதல்வர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News