காவிரி: ஏப்ரல் 23 மனிதச்சங்கிலி அறப்போராட்டம் -சிபிஐஎம் அழைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23-ம் தேதி மனிதச்சங்கிலி அறப்போராட்டம் நடைபெற உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 20, 2018, 04:43 PM IST
காவிரி: ஏப்ரல் 23 மனிதச்சங்கிலி அறப்போராட்டம் -சிபிஐஎம் அழைப்பு title=

ஏப்ரல் 23 மனிதச்சங்கிலியை வெற்றிகரமாக்க கரம் கோர்ப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதைக்குறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ஆம் தேதி எதிர்க் கட்சிகளின் சார்பில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மனிதச்சங்கிலி அறப்போராட்டம் நடைபெற உள்ளது. 

தமிழகத்தின் தண்ணீர் உரிமையைப் பாதுகாக்கும் இந்தப் போராட்டத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு தர வேண்டுகிறோம். மத்தியில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் அனைத்து வகையிலும் வஞ்சிக்கப்டுகிறது. 

Image may contain: text

தட்டிக்கேட்க வேண்டிய மாநில அதிமுக அரசு கூனிக்குறுகி, கும்பிட்டு விழுந்து பதவி ஒன்றே பிரதானம் என நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.

தமிழக மக்களுக்கு மோடி அரசு துரோகம் செய்து வரும் நிலையில், கடமை தவறிய மாநில அரசின் பொறுப்புகளை மக்களைத் திரட்டி எதிர்க் கட்சிகள் செய்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் மறியல், மாநிலம் தழுவிய பொது வேலைநிறுத்தம், காவிரி உரிமை மீட்பு பயணங்கள், பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என தொடர்ச்சியாக களம் கண்டு வருகிறோம். 

அடுத்த கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணிவரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனிதச்சங்கிலி அறப்போராட்டம் நடைபெற உள்ளது. தமிழக்தின் உரிமையை பாதுக்காக்க நடைபெறும் இந்த போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய தமிழக மக்கள் முழுமையான ஆதரவு தர வேண்டுகிறோம். 

Image may contain: text

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் இந்த இயக்கத்தில் முழுமையாக பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டுகிறோம்.

ஏப்ரல் 23-ம் தேதி தமிழகமே மனிதச் சுவராக மாறி எழுந்து நிற்கட்டும். காவிரியில் தமிழகத்தின் உரிமையை காக்க கரம் கோர்ப்போம். களம் காண்போம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

Trending News