மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பைப் பெறுவர்.
மார்கழியில் அதிகாலை எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும். மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மேலும் விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.
இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.
இந்நிலையில் மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையை இனிய குரலில் பாடி இறையருள் பெறுங்கள்.
பாடல் - 23
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
பொருள்: மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
விளக்கம்: எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு...என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண் கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.