ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் நிரந்தரமாக செல்லும் என அறிவியுங்கள்: PMK

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் நிரந்தரமாக செல்லும் என அறிவியுங்கள் என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Aug 25, 2020, 10:11 AM IST
ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் நிரந்தரமாக செல்லும் என அறிவியுங்கள்: PMK title=

தமிழ்நாட்டில் 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு  வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் காலாவதியாகவிருக்கும் நிலையில், அவர்கள் பணி பெறுவதற்கு  வசதியாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனங்களே நடத்தப்படாதது மிகவும்  ஏமாற்றமளிக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணி கனவு, கைக்கெட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பதற்கு உதாரணமாகிவிடாமல் தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி விதிகள் வகுக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் ஓராண்டு கழித்து 2011 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி தான் தமிழகத்தில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதன்படி 2012-ஆம் ஆண்டு முதன்முறையாக தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அத்தேர்வுகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில் அவர்களில் பெரும்பான்மையினர் அடுத்து மேற்கொள்ளப்பட்ட நியமனங்களில் வேலைவாய்ப்பு பெற்றனர். ஆனால், 2013&ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை.

 

ALSO READ | தகுதித் தேர்ச்சி பெறாதோர் பணி நீக்கமா? -பாமக கேள்வி!

அதேநேரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் அடுத்த 7 ஆண்டுகளுக்கு மட்டும் தான் செல்லுபடியாகும். அதனால், 2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வில்  வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் அடுத்த சில வாரங்களில் காலாவதியாகிவிடும். அதன்பின் அவர்கள் அவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும். மீண்டும் எப்போது தகுதித் தேர்வு நடத்தப்படும் என்பதே  தெரியாத நிலையில், அவர்கள் அடுத்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பாக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட்டு விட்டால், அவர்கள் தேர்ச்சி பெற்றது மீண்டும் அர்த்தமற்றதாகி விடும். ஆகவே,   2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் நிரந்தரமாக செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவிப்பது தான் அனைவருக்கும் நியாயமான தீர்வாக அமையும்.

2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இந்த கோரிக்கை மிகவும் நியாயமானது ஆகும். ஏனெனில், கடந்த 6 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் பணி நியமனமே தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. அதற்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு இன்று வரை பணி ஆணைகள் வழங்கப்படவில்லை. இவை எதுவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தவறல்ல; அரசின் தவறு. கடந்த 6 ஆண்டுகளில் காலியான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருந்தால், அவர்களுக்கு எப்போதோ பணி கிடைத்திருக்கும். அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி  ஏற்பட்டிருக்கும்.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். கல்வி அமைச்சர் கவலைப்பட்டால் மட்டும் போதாது;  தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் கவலையைப் போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

ALSO READ | தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் தடை

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தகுதிச் சான்றிதழை நிரந்தரச் சான்றிதழாக மாற்றுவதில் எந்த தடையும் இல்லை. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பேராசிரியர் பணிக்கு  தகுதி பெறுவதற்கான தேசிய, மாநில அளவிலான தகுதித் தேர்வுகளில் (NET/SET) வென்றோருக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் அவர்களின் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். பிகார், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் நிரந்தரச் சான்றிதழ்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அதேபோல், தமிழ்நாட்டில் 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிச் சான்றிதழ்களை நிரந்தரமான சான்றிதழ்களாக மாற்றி அரசு அறிவிக்க வேண்டும்; அதன்மூலம் ஆசிரியர் பணியை எதிர்பார்த்து 6 ஆண்டுகளாக காத்திருக்கும் 80 ஆயிரம் பேர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் வாழ்வில் அரசு ஒளியேற்ற வேண்டும் என்றார்.

Trending News